இலங்கை தொடர்பில் நோர்வே அரசின் நிலைப்பாடு என்ன; இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் நோர்வேயின் அவதானிப்புகள் என்ன; இலங்கை அரசரோடு இதுவிடயமாக நோர்வே அரசு தொடர்பில் இருக்கிறதா போன்ற வினாக்களுக்கு விடையளிக்கும்படி, நோர்வேயின் சோஷலிச இடதுசாரிக்கட்சியை சேர்ந்த அரசியலாளரான “Kari Elisabeth Kaski” அம்மையார், நோர்வேயின் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.
முள்ளிவாய்க்கால் இனவழிப்பினை நினைவுகூருமுகமாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில், 2019 ஆம் ஆண்டு பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்ட நினைவுத்தூபியானது, கடந்த 08.01.2021 அன்று, பாரிய இயந்திரங்கள் கொண்டு, இலங்கை அரசின் உத்தரவுக்கமைய இடித்தழிக்கப்பட்டதையும், அந்த வேளையில், பல்கலைக்கழக சூழலில் இலங்கை காவல்துறை மற்றும் இராணுவத்தின் பிரசன்னம் அதிகளவில் இருந்தததையும் குறிப்பிட்டிருக்கும் “Kari Elisabeth Kaski” அம்மையார், மேற்படி சம்பவம் மாணவர்களிடையேயும், உள்ளூர் மற்றும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களிடையேயும் கடுமையான எதிர்வினைகளை உண்டாக்கியுள்ளதாகவும், இது போன்ற சம்பவங்கள், இலங்கையில் மக்களிடையேயான நல்லிணக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அரிதாகவே காணப்படுவதை சுட்டி நிற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி, நோர்வேயின் சோஷலிச இடதுசாரிக்கட்சியை சேர்ந்த அரசியலாளரான “Kari Elisabeth Kaski” அம்மையார், நோர்வேயின் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் எழுப்பியிருந்த கேள்விகளுக்கு பதிலளித்திருக்கும் நோர்வேயின் வெளியுறவுத்துறை அமைச்சரான “Ine Eriksen Søreide” அம்மையார், இறுதிப்போர் முடிவுக்கு வந்து 12 வருடங்கள் கடக்கும் நிலையில், இலங்கை மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயற்பாடானது தொடர்ந்தும் சவாலாகவே இருக்கிறதெனவும், யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டமையானது அச்சத்தை மேலும் அதிகரிப்பதாகவே பார்க்கப்படக்கூடியதெனவும் தெரிவித்துள்ளதோடு, நோர்வேயின் வெளியுறவுத்துறையானது நிலைமையை தெரிந்து வைத்துள்ளதாகவும், மேற்படி நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டதன் பின்னதான, பல்கலைக்கழக மாணவர்களினதும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களினதும் உணர்வுகளை புரிந்து கொள்ளக்கூடியதாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளதோடு, இடித்தழிக்கப்பட்ட நினைவுத்தூபி அமைந்திருந்த அதே இடத்தில் புதிய நினைவுத்தூபி அமைக்கப்படுமென, யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தாலும், பல்கலைக்கழக மாணவ சமூகத்தாலும் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
2009 இறுதிப்போருக்கு பின்னரான காலப்பகுதியில், இலங்கை அரசுகள் நல்லிணக்கத்துக்கான சில வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்ததாக மேலும் தெரிவித்திருக்கும் நோர்வேயின் வெளியுறவுத்துறை அமைச்சர், 2015 ஆம் ஆண்டில் ஐ.நா. மனிதவுரிமைகள் சபையில் ஒத்துக்கொள்ளப்பட்ட விதந்துரைகளின் பிரகாரம், இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் மனிதவுரிமை நிலைப்பாடுகளின் மேம்பாடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இணக்கம் காணப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி இணக்கப்பாடுகள் தொடர்பில் அவற்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கரிசனை கொண்ட நாடாக நோர்வே இருந்திருக்கிறது என குறிப்பிட்டுள்ள நோர்வே வெளியுறவுத்துறை அமைச்சர், உண்மைகளை கண்டறிவதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகளை வழங்குவது தொடர்பிலும், போர்க்குற்றங்களுக்கான விசாரணைகளை முன்னெடுப்பதற்கான விசேட நீதித்தளங்களை அமைப்பது தொடர்பிலும், அரச நிர்வாக முறைமைகளை நாடு முழுவதிலும் பகிர்ந்தளிப்பது தொடர்பிலும் நோர்வே கரிசனை கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மனிதவுரிமைகள் சபையின் ஒத்துக்கொள்ளப்பட்ட விதந்துரைகளை நடைமுறைப்படுத்துவதிலும், காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் உண்மைகளை கண்டறிவதற்கு அமைக்கப்பட்ட தனி அலகை (OMP) சரியாக நடைமுறைப்படுத்துவதிலும், அரசினால், இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட பொதுமக்களின் காணிகளை விரைந்து விடுவிப்பதிலும் இலங்கை அரசின் ஈடுபாடு பிரதானமானதாக இருக்கவேண்டியது அவசியம் என்றாலும், மேற்படி விடயங்கள் மிக மந்த கதியிலேயே நடந்திருப்பதாகவும் இன்னமும் நடைபெறவேண்டியவை ஏராளமானவை உண்டென்றும் தெரிவித்திருக்கும் நோர்வேயின் வெளியுறவுத்துறை அமைச்சர், 2020 பெப்ரவரி மாதம் ஐ.நா. மனிதவுரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பில் வெளியிட்டிருந்த அறிக்கையிலும் இதே விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், ஆணையாளரின் அறிக்கையின்படி, பொறுப்புக்கூறல் தொடர்பாகவும், மனிதவுரிமைகளை மேம்படுத்துவதிலும் இலங்கை அரசு கடைப்பிடிக்கும் பொறுப்பற்ற மெத்தனப்போக்கானது, மேற்படி சம்பவங்கள் இலங்கையில் மீண்டும் மீண்டும் நடைபெறக்கூடிய சூழ்நிலைகளே தொடர்ந்தும் காணப்படுவதாகவும் கருத இடமுண்டு எனவும் தெரிவித்துள்ளதோடு, 2019 ஆம் ஆண்டில் பொறுப்புக்கு வந்த புதிய இலங்கை அதிபர் “கோட்டா பய ராஜபக்க்ஷ” அவர்கள், ஐ.நா. மனிதவுரிமைகள் சபையில் ஏற்கெனவே ஒத்துக்கொள்ளப்பட்ட விதந்துரைகளிலிருந்து இலங்கை விலகிக்கொள்கிறதென அறிவித்திருந்ததையும் நினைவுபடுத்தியுள்ளார்.

2020 மார்ச் மாதத்தைய, ஐ.நா. சபையின் மனிதவுரிமைகள் ஆணையாக அறிக்கையை சுட்டிக்காட்டியுள்ள நோர்வே வெளியுறவுத்துறை அமைச்சர், அதன்படி, மனிதவுரிமை ஆணையாளரின் கருத்துக்களுக்கு முக்கியம் கொடுப்பதோடு, ஏற்கெனவே ஒத்துக்கொள்ளப்பட்ட விதந்துரைகளை இலங்கை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதோடு, சர்வதேச ரீதியாக கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய கடப்பாடுகளையும், மனிதவுரிமை நிலைமைகளில் மேம்பாடு, இடைக்கால நீதி மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளையும் இலங்கை தொடர வேண்டுமென்பதே நோர்வேயின் நிலைப்பாடு எனவும் மேலும் குறிப்பிட்டுள்ளதோடு, கடந்த காலங்களைப்போலவே இவை தொடர்பில் அரச மட்டத்திலான தொடர்புகளையும் இலங்கையோடு ஏற்படுத்திக்கொள்ளவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
நோர்வே சார்பில் மேற்கொள்ளப்படும் இலங்கைக்கான பயணங்களின்போது இலங்கையில் அரசியல் மற்றும் மனிதவுரிமை நிலைமைகளில் மேம்பாடு உள்ளிட்ட விடயங்களில் அதியுயர் அரசமட்டத்தில் சந்திப்புக்களை நோர்வே மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ள நோர்வே வெளியுறவு அமைச்சர், 2020 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் இலங்கை பிரதமர் “மஹிந்த ராஜபக்க்ஷ” அவர்களோடு இலங்கைக்கான நோர்வேயின் தூதுவர் மேற்கொண்டிருந்த உயர்மட்ட சந்திப்பையும் கோடி காட்டியுள்ளார்.
கொழும்பிலுள்ள நோர்வே தூதரகத்தின் வாயிலாக, இலங்கை அரசோடு தொடர்புகளை பேணிவரும் நோர்வே, நல்லிணக்கம், மனிதவுரிமை நிலைகளில் மேம்பாடு, இடைக்கால நீதி போன்ற விடயங்களில் காத்திரமான முன்னேற்றங்களுக்கான தொடர்பாடல்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கும் நோர்வே வெளியுறவுத்துறை அமைச்சர், மேற்படி விடயங்களில் காத்திரமான பங்கை வகிக்கக்கூடிய திட்டங்களுக்கு உதவுவதற்கு நோர்வே தயாராக இருக்கிறதெனவும், குறிப்பாக, மேற்படி விடயங்களில் முன்னேற்றகரமான செயற்திட்டங்களையும், பரந்துபட்ட சனநாயக நடைமுறைகளை முன்நகர்த்தக்கூடிய அமைப்புக்களை நோர்வே முன்னிலைப்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளதோடு, போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் புதிய வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தும் திட்டங்களுக்கும் நோர்வே உதவும் எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நிலைமைகளை உன்னிப்பாக நோர்வே தொடர்ந்தும் அவதானித்து வருமென உறுதியளித்திருக்கும் நோர்வேயின் வெளியுறவுத்துறை அமைச்சர் “Ine Eriksen Søreide” அம்மையார், ஐ.நா. மனிதவுரிமைகள் சபையில் ஒத்துக்கொள்ளப்பட்ட விதந்துரைகளை சரியானதும், தகுந்ததுமான முறையில் இலங்கை செயற்படுத்துவதை நோர்வே தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் மேலும் தனது பதில் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.