அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் இலங்கைக்கான பயண எச்சரிக்கை ஆலோசனைகளை தொடர்ந்தும் பேணுகின்றன.
இலங்கைக்கு செல்லும் தங்களது நாட்டு பிரஜைகளை எச்சரிக்கையுடன் இருக்குமாறு குறித்த நாடுகள் தொடர்ந்தும் அறிவுறுத்துகின்றன.
கடந்த ஒக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட அமெரிக்க பயண ஆலோசனையின்படி, எரிபொருள் மற்றும் ஔடத தட்டுப்பாடு, உள்நாட்டு அமைதியின்மை என்பன காரணமாக சுற்றுலா பயணிகள் இலங்கையில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது.
இலங்கையில் பொருளாதார நிலைமை தொடர்பான போராட்டங்கள் எந்த சந்தர்ப்பத்திலும் ஏற்படலாம்.
சில சந்தர்ப்பங்களில் போராட்டங்களில் ஈடுபடுபவர்களை கலைப்பதற்காக காவல்துறையினர் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகங்களை மேற்கொண்டதாக தெரிவித்து அமெரிக்கா பயண எச்சரிக்கை ஆலோசனையை கடந்த ஒக்டோபர் மாதம் வெளியிட்டது.
எனினும் குறித்த பயண எச்சரிக்கை ஆலோசனை இதுவரை மாற்றப்படவில்லை.
இதேவேளை, கடந்த நவம்பர் மாதம் அவுஸ்திரேலியாவினால் வெளியிடப்பட்ட பயண ஆலோசனையானது, இன்றும் நடைமுறையில் உள்ளது.
உள்நாட்டு அமைதியின்மை, எரிபொருள் மற்றும் இதர பொருட்களின் பற்றாக்குறை காரணமாக இலங்கையில் உள்ள தங்களது நாட்டு பிரஜைகள் அதிக அவதானத்துடன் இருக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.