மட்டக்களப்பு நகரில் லொயிஸ் அவனியூர் வீதியில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களையும் எதிர்வரும் 19 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார்
கடந்த ஓகஸ்ட் மாதம் 11ம் திகதி மட்டுநகர் லொயிஸ் அவனியூர் வீதி உள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றிற்கு அருகில் முனைத்தீவு பெரிய போரதீவு களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 53 வயதுடைய வல்லிபுரம் அன்பழகன் என்பவர் சடலமாக மீட்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து குறித்த சடலத்தை அவரது மனைவியார் அடையாளம் காட்டிய நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான விசாரணையில் சிசிரி கமரா ஒன்றினை சோதனையிட்டபோது அதில் உயிரிழந்தவரை இருவர் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்து இரு தடவைகள் பொல்லால் தாக்கும் காட்சிகள்; பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் குறித்த சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மேற்கொண்ட பிரேத பரிசோதனையில் அவரின் தலைமீது ஏற்பட்ட பொல் தாக்குதலில் தலை உடைந்து இரத்தம் மூளையில் சென்ற கசிவினால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதா தெரியவந்துள்ளதையடுத்து நகர்பகுதியைச் சேர்ந்த 22,21 வயதுடைய இரு இளைஞர்களை கடந்த 13 ம் திகதி சந்தேகத்தின் பேரில் கைது செய்ததுடன் மோட்டர் சைக்கிள் ஒன்றையும் மீட்டு இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்
இச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இருவரின் வழக்கு விசாரணை இன்று திங்கட்கிழமை (5) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் எடுத்துக் கொண்டபோது இருவரையும் எதிர்வரும் 19 ம் திகதி வரை விளக்கமறியில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.