இஸ்ரேலுடனான போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 50 மில்லியன் டொலருக்கும் அதிகமான ரொக்கப் பரிசுகளை ஹிஸ்புல்லா வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தகவலை அதன் தலைவர் நைம் காசிம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். ஈரான் ஆதரவால் இயங்கும் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலுடனான மிக மோசமான மோதலுக்குப் பிறகு அதன் ஆதரவு தளத்தை உயர்த்த முயற்சி முன்னெடுத்து வருகிறது.
இதன் ஒருபகுதியாக ஒவ்வொருவருக்கும் தலா 300 முதல் 400 டொலர் என மொத்தம் 77 மில்லியன் டொலர் ஹிஸ்புல்லா அமைப்பு செலவிட்டுள்ளது. உதவிகள் அனைத்தும் பதிவு செய்துள்ள 233,500 குடும்பங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, நிதியுதவி அளிக்க உதவிய ஈரானுக்கும் நைம் காசிம் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் போரினால் முதன்மையான வீடு சேதமடைந்துள்ளவர்களுக்கு 8,000 டொலர் உதவியும்
பெய்ரூட் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் வாடகைக்கு வசிப்பவர்களுக்கு ஓராண்டு வடகையாக 6000 டொலரும், சொந்த வீட்டுக்கு திரும்பும் வரையில் தலைநகருக்கு வெளியே வசிக்கும் மக்களுக்கு 4,000 டொலரும் நிதியுதவி அளித்துள்ளனர்.
ஹிஸ்புல்லா படைகளுக்கு ஆதரவு அதிகமுள்ள பகுதிகளை குறிவைத்தே இஸ்ரேல் தாக்குதலை முன்னெடுத்துள்ளது. இந்த நிலையில், 14 மாத கால மோதலுக்கு பின்னர் போர் நிறுத்தம் கடந்த மாத இறுதியில் அமுலுக்கு வந்தது.
ஆனால் ஐக்கிய நாடுகள் மன்றம், பிரான்ஸ் மற்றும் லெபனான் அதிகாரிகளால் பல முறை போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஒப்பந்தத்தின் விதிமுறைகளை அமுல்படுத்துவதாக இஸ்ரேல் கூறுவதுடன் ஹிஸ்புல்லா படைகளே அதை மீறியதாக குற்றம் சாட்டுகிறது. போரின் போது லெபனானில் கிட்டத்தட்ட 100,000 வீடுகள் பகுதி அல்லது முழுமையாக சேதமடைந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
சேதம் அல்லது இழப்பின் மொத்த மதிப்பு 3.2 பில்லியனாக இருக்கலாம் என்றும் கணக்கிட்டுள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் 8ம் திகதி ஹமாஸ் படைகளுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து போர் தொடங்கியது, பின்னர் இந்த ஆண்டு செப்டம்பரில் இஸ்ரேல் ராணுவம் லெபனான் மீது தாக்குதலை முன்னெடுத்தது குறிப்பிடத்தக்கது.