சிரியாவில் அதிபராக இருந்த பஷார் அல்-அசாத்தின் அரசாங்க படைகளுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் குழு அதிரடி தாக்குதல் நடத்தியது.
இதில் தலைநகர் டமாஸ்கஸ் உள்பட முக்கிய நகரங்களை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதையடுத்து அசாத்தின் ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து நாட்டைவிட்டு தப்பி சென்ற அசாத் ரஷியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
இதற்கிடையே சிரியாவில் அதிபர் அசாத் அரசு கவிழ்ந்ததை இஸ்ரேல் வரவேற்று உள்ளது. அதேவேளையில் தங்கள் நாட்டின் பாதுகாப்புக்காக சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
சிரியாவில் உள்ள ரசாயன ஆயுதங்கள், ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கிளர்ச்சியாளர்களிடம் கிடைத்தால் இஸ்ரேலுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கருதி சிரியாவின் ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
100-க்கும் மேற்பட்ட ராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுகளை வீசியது. அசாத் ஆட்சியின் ராணுவ திறன்களை அழிக்க இஸ்ரேல் தனது தாக்குதல்களை அதிகரித்துள்ளது.
இதன்மூலம் ராணுவ ஆயுதங்களை கிளர்ச்சியாளர்கள் பயன்படுத்துவதை தடுக்க முடியும் என்று இஸ்ரேல் கருதுகிறது.
இந்த தாக்குதலில் பார்சா அறிவியல் ஆய்வு மையம் உள்பட பல இடங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக, மனித உரிமைகளுக்கான சிரியா கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ரமி அப்தெல் ரஹ்மான் தெரிவித்தார்.