இஸ்ரேல் மற்றும் காஸாவில் நடக்கும் வன்முறை சம்பவங்கள் அடிப்படைவாதிகளை பிரித்தானியாவில் தாக்குதலை நடத்த தூண்டக் கூடும் என பயங்கரவாத தடுப்பு அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார். இந்த இக்கட்டான சூழலில் பிரித்தானிய பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேலிய மக்களை ஹமாஸ் படைகள் கொன்று குவித்ததும், பதிலுக்கு காஸா பகுதியில் இஸ்ரேல் கண்மூடித்தனமான தாக்குதலை முன்னெடுத்து வருவதும் பொதுமக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், சனிக்கிழமை லண்டனில் துருக்கி மற்றும் எகிப்திய தூதரகங்கள் முன்பு பாலஸ்தீன ஆதரவு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட இருப்பதால் 1000 பொலிசார் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவான அறிகுறிகள் தென்படுகிறதா என்பதையும் பயங்கரவாத தடுப்பு அதிகாரிகள் குழு கண்காணிக்க உள்ளது. ஹமாஸ் படைகளை போற்றும் படங்கள், பதாகைகளுடன் காணப்படுபவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள்.
வெளிநாடுகளில் நடக்கும் சம்பவங்கள் பல வேளைகளில் பிரித்தானியாவில் எதிரொலித்துள்ளது என்றும் அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர். இஸ்ரேல் – ஹமாஸ் சமீபத்திய தாக்குதல் சம்பவத்தை அடுத்து, பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்ட 21 பிரித்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யூத மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ரோந்து நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி, பிரித்தானியா முழுக்க 445 பாடசாலைகள், 1,930 தொழுகை கூடங்களில் அதிகாரிகள் தரப்பு விசாரிக்க சென்றுள்ளனர். இதில் லண்டனில் அமைந்துள்ள 300 யூத ஜெப ஆலயங்கள் மற்றும் இஸ்லாமியர்களின் மசூதிகளும் அடங்கும்.
பிரித்தானியாவை பொறுத்தமட்டில் ஹமாஸ் படைகள் தீவிரவாதிகள் என்றே அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.