தலைநகர் தெஹ்ரான் மீதான விமானத் தடையை ஈரான் நீக்கியுள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு, ஈரான் 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் பெரும்பாலான தாக்குதல்கள் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைப்புகளால் தடுக்கப்பட்டன. இந்த தாக்குதல், பல ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே நீடித்த நிழல் போரை திறந்த வெளிக்கு கொண்டு வந்துள்ளது.
மேலும் இஸ்ரேல் அல்லது அமெரிக்கா பதிலடி கொடுத்தால், ஈரான் இன்னும் சக்தி வாய்ந்த தாக்குதலை நடத்தும் என்று எச்சரித்துள்ளது.
ஆனால் தங்களது பதில் தாக்குதலை இஸ்ரேல் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சூழ்நிலை, பரந்த அளவிலான மோதலுக்கு வழிவகுக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதலுக்கு முன்னும் பின்னும் ஈரான் தனது தலைநகரான தெஹ்ரான் மீது விதித்து இருந்த விமானத் தடையை ஈரான் நீக்கியுள்ளது.
இதன் மூலம் ஈரானிய விமான நிலையங்கள் மீண்டும் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களை இயக்கவுள்ளன.
இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு முன்னதாக ஈரானின் தெஹ்ரானில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.