இஸ்ரேல் – ஹமாஸ் போர் சூழலில் மத்திய கிழக்கில் அமெரிக்க துருப்புகள் மீது கை வைத்தால் பழிவாங்கப்படும் என அமெரிக்க வெளிவிவகார செயலர் ஆண்டனி பிளிங்கன் மிரட்டல் விடுத்துள்ளார். இஸ்ரேல் – ஹமாஸ் போர் மத்திய கிழக்கு நாடுகளில் வியாபிக்கும் வாய்ப்புகள் அதிகரித்தே காணப்படுகிறது. மேலும், காஸா பகுதிக்குள் முழு வீச்சிலான தரைவழி தாக்குதல்களுக்கு இஸ்ரேல் தயார் நிலையில் உள்ளது.
ஆனால், சர்வதேச தலைவர்கள் தங்கள் ஆதரவை தெரிவிக்கும் பொருட்டு இஸ்ரேலுக்கு வந்து செல்வதால், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தரைவழித் தாக்குதலை தாமதப்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் முகாமிட்டுள்ள அமெரிக்க துருப்புகளை குறி வைத்தால், ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் உறுதியாக பழிவாங்கும் என்றார் ஆண்டனி பிளிங்கன்.
மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க மக்களையும் துருப்புகளையும் பாதுகாக்கும் பொருட்டு, உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதைய சூழலில் புதிதாக ராணுவ தளவாடங்களை மத்திய கிழக்கில் தரையிறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஹமாஸ் படைகளை ஒழித்த பின்னர் காஸா பகுதியை ஆளும் எண்ணம் இஸ்ரேலுக்கு இல்லை எனவும், போருக்குப் பிறகு, தற்போதைய நிலைக்குத் திரும்புவது கடினம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அக்டோபர் 7ல் ஹமாஸ் நடத்திய கொடூரத் தாக்குதல்களுக்குப் பிறகு இஸ்ரேலின் இராணுவம் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் இலக்குகளை குண்டுவீசி அழித்து வருகிறது.
மட்டுமின்றி, காஸா மீது தரைவழித் தாக்குதலுக்கு முன்னோடியாக இஸ்ரேலிய விமானப்படை மீண்டும் அதன் தாக்குதல்களை அதிகரித்து வருகிறது.
மேலும், எதிர்பார்க்கப்படும் தரைவழித் தாக்குதல் முடிவடைந்த பிறகு இஸ்ரேல் என்ன திட்டம் வைத்திருக்கிறது என்பது குறித்து எந்த தகவலும் இல்லை என்றே கூறப்படுகிறது.