அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதல் நாளுக்கு நாள் வலுத்து வரும் நிலையில் ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்புக்கு எதிராக அமெரிக்கா வான்தாக்குதல் நடத்தியது. இதில் 30-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். இதை கண்டித்து ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தூதரகத்தை சூறையாடினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ஈராக்கில் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டதற்கு ஈரானே முழு பொறுப்பு என கூறி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில் ‘‘அமெரிக்க தூதரக சொத்துகளுக்கோ, அதிகாரிகளுக்கோ ஏதாவது ஆபத்து ஏற்பட்டால், அதற்கு ஈரான் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும். இது வெறும் எச்சரிக்கை அல்ல. பகிரங்க மிரட்டல்’’ என தெரிவித்துள்ளார். அதேசமயம் டிரம்பின் இந்த மிரட்டலுக்கு பதில் அளித்துள்ள ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி அமெரிக்காவில் ஒன்றும் செய்துவிட முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் புத்தாண்டு மாலை நேர விருந்தில் கலந்து கொண்ட டிரம்பிடம், ஈரானுடனான அமெரிக்காவின் மோதல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு டிரம்ப் பதிலளிக்கும்போது, ‘‘ஈரானுடன் போரா? நிச்சயம் இது ஈரானுக்கு நல்ல யோசனையாக இருக்காது. நான் அமைதியை விரும்புகிறேன். போர் நடக்கும் என்று நான் நினைக்கவில்லை’’ என்றார்.