குர்திஷ்தான் என்ற தனிநாடு அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு துருக்கியில் வசித்து வந்த குர்திஷ் இன மக்கள் துருக்கி அரசு படையினர் மீது பல ஆண்டுகளாக தாக்குதலில் ஈடுபட்டு வந்தனர்.
மேலும், துருக்கியுடன் எல்லையை பகிர்ந்துள்ள சிரியாவிலும் குர்திஷ் போராளிகள் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பினர் சிரியாவில் இருந்தவாறு துருக்கி மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். குர்திஷ் போராளிகளை குறிவைத்து துருக்கி பாதுகாப்பு படையினரும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த மோதல் காரணமாக 1990-ம் ஆண்டு முதல் ஏராளமான குர்திஷ் மக்கள் துருக்கியில் இருந்து அகதிகளாக வெளியேறி ஈராக் நாட்டில் தஞ்சம் அடைந்தனர். அவர்களுக்கு ஈராக்கின் எர்பில் மாகாணத்தில் உள்ள மஹ்மூர் என்ற நகரத்தில் ஐநா ஆதரவுடன் அகதிகள் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த அகதிகள் முகாம்களில் குர்திஷ் மக்கள் வசித்து வருகின்றனர்.
இதற்கிடையில், ஈராக்கில் இருந்தும் துருக்கி மீது குர்திஷ் போராளிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர். துருக்கி பாதுகாப்பு படையினரும் இந்த தாக்குதலுக்கு பதிலடிகொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், ஈராக்கின் மஹ்மூர் பகுதியில் குர்திஷ் அகதிகள் வசித்து முகாம்களை குறிவைத்து துருக்கி விமானப்படை நேற்று தாக்குதல் நடத்தியது.
ஆளில்லா விமானம் மூலம் அகதிகள் முகாம்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் குர்திஷ் இன மக்கள் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 2 பேர் படுகாயமடைந்தனர்.