ஈராக்கில் நிலைகொண்டுள்ள அனைத்து அந்நியப்படைகளும் வெளியேறவேண்டும்! ஈராக்கிய நாடாளுமன்றம் தீர்மானம்!!

You are currently viewing ஈராக்கில் நிலைகொண்டுள்ள அனைத்து அந்நியப்படைகளும் வெளியேறவேண்டும்! ஈராக்கிய நாடாளுமன்றம் தீர்மானம்!!


ஈராக்கில் நிலை கொண்டுள்ள அனைத்து வெளிநாட்டுப்படைகளும், ஈராக்கிலிருந்து வெளியேறுவதையே தாம் விரும்புவதாக, ஈராக்கிய நாடுளுமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்க அதிபர் “டொனால்ட் ட்ரம்ப்” பின் விசேட உத்தரவின் பேரில் கொல்லப்பட்ட, ஈரானிய பிரதான இராணுவத்தளபதியான “காஸிம் சுலைமானி” யின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொண்ட ஈராக்கிய பிரதமர் “அதீல் அப்துல் மஹ்தி” இத்தகவலை பகிரங்கப்படுத்தியுள்ளார்.

“காஸிம் சுலைமானி” யின் படுகொலையை தொடர்ந்து கடும் சீற்றமடைந்துள்ள ஈரான், இப்படுகொலைக்கு அமெரிக்க அதியுயர் விலைகளை கொடுக்க வேண்டும் எனவும், அமெரிக்க இலக்குகள்மீது பழிவாங்கல் தாக்குதல்களை ஈரான் நடத்தும் என்றும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், ஈரான் அமெரிக்க நிலைகள்மீது தாக்குதல்களை தொடுக்கும் பட்ச்சத்தில், ஈரானிய இலக்குகள்மீதும் பதில்தாக்குதல்கள் நடத்தப்படுமென அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஈராக்கிய பிரதமரின் இவ்வறிவிப்பு இன்று 05.01.2020 ஞாயிறு வெளியாகியுள்ளது. ஈராக்கில் சுமார் 5000 அமெரிக்கப்படைகள் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில், ஈராக்கின் உத்தரவை அமெரிக்க மதித்து, அங்கிருந்து வெளியேறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

ஈரானிய இராணுவத்தளபதியை அமெரிக்கா படுகொலை செய்தமையானது, மத்தியகிழக்கில் தற்போதுள்ள நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளதாகவும், இதற்கான பொறுப்பை அமெரிக்காவே எடுத்துக்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்துள்ள ஈராக்கிய பிரதமர், கோபமடைந்ததுள்ள ஈரான், ஈராக்கிலுள்ள அமெரிக்கநிலைகள்மீது தாக்குதல் தொடுக்கும் பட்சத்தில், அது ஈரக்குக்கே மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவோடு போரொன்றை தான் எப்போதுமே விரும்பியிருக்கவில்லை எனத்தெரிவித்திருக்கும் ஈரான், எனினும், தமது இராணுவத்தளபதியை படுகொலை செய்ததன்மூலம் வேண்டாத போர் ஒன்றிற்கு அமெரிக்காவே தன்னை இழுத்து வந்துவிட்டதாகவும், தமது பதில்தாக்குதல்களுக்கு அமெரிக்க முகம் கொடுத்தேயாகவேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில், ஈரானோடு வலிந்த போரொன்றுக்கு பெருமுயற்சிகளை மேற்கொண்டிருந்த அமெரிக்கா, அந்த முயற்சிகள் பலனளிக்காததால், ஈரானை சீண்டும் விதத்தில் ஈரானிய இராணுவத்தளபதியை கடந்த 03.01.2020 வெள்ளியன்று படுகொலை செய்திருந்தது. அமெரிக்காவின் இச்செயல், அமெரிக்காவிலும் சர்வதேசத்திலும் கடும் கண்டனங்களை தோற்றுவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அமெரிக்காவுடன் செய்துகொண்டிருந்த அணுசக்தி தொழிநுட்ப கட்டுப்பாட்டு ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொள்வதாக ஈரான் இன்று அறிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள