ஈரானிய ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் வெளிவிவகார அமைச்சிடம் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருப்பதாக சிங்கள நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரய்ஷி ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் 24 ஆம் திகதி இலங்கைக்கு வருகைதரவுள்ளார். சுமார் 529 மில்லியன் டொலர் பெறுமதியில் ஈரானின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டிருக்கும் உமா ஓயா திட்டத்தைத் திறந்துவைப்பதே அவரது விஜயத்தின் நோக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் ஈரானால் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட வான்வழித்தாக்குதலை அடுத்து பிராந்தியத்தில் நிலவும் பதற்றநிலைக்கு மத்தியிலேயே ஈரானிய ஜனாதிபதியின் இலங்கை விஜயம் குறித்த செய்தி வெளியானது.
இவ்வாறானதொரு பின்னணியில் ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரய்ஷியின் இலங்கை விஜயம் தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்கத்தூதரகத்தின் உயர்மட்ட அதிகாரிகள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருப்பதாக ‘அருண’ சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்கத்தூதரகத்தின் அதிகாரிகள் கடந்த 16 ஆம், 17 ஆம் திகதிகளில் வெளிவிவகார அமைச்சுக்கு விஜயம் மேற்கொண்டதாகவும், இதன்போதே அவர்கள் ஈரானிய ஜனாதிபதியின் வருகை தொடர்பில் எதிர்ப்பை வெளிப்படுத்தியதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுஇவ்வாறிருக்க கடந்த 2008 ஆம் ஆண்டின் பின்னர் ஈரானிய ஜனாதிபதியொருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது இதுவே முதன்முறையாகும்.