இஸ்ரேல் உளவாளி ஒருவர் ஈரானில் தூக்கில் இடப்பட்டதாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஈரான் அரசு தொலைக்காட்சி நேற்று வெளியிட்ட செய்தியில், “இஸ்ரேல் உளவு நிறுவனமான மொசாட் உட்பட வெளிநாட்டு உளவு அமைப்புகளுடன் தொடர்புடைய ஒருவர் (விவரம் தரப்படவில்லை) சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஈரான் பாதுகாப்பு தொடர்பான ரகசிய தகவல்களை வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தென்கிழக்கு சிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தின் ஜாஹேதான் நகரில் உள்ள சிறையில் அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது” என்று தெரிவித்து உள்ளது. கடந்த 2022 ஏப்ரலில் மொசாட் உடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈரான் உளவு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் தூக்கில் இடப்பட்டவர் இந்த மூவரில் ஒருவரா என்பது தெரியவில்லை. தங்கள் நாட்டை உளவு பார்ப்பதாக ஈரானும் இஸ்ரேலும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன.
இரு நாடுகளும் பல ஆண்டுகளாக நிழல் யுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. ஈரானை தனது மிகப்பெரிய அச்சுறுத்தலாக இஸ்ரேல் கருதுகிறது. ஈரான் அணு ஆயுதங்களை வாங்குவதைத் தடுக்க அந்நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்போவதாக பலமுறை அச்சுறுத்தியது. ஆனால் அணு ஆயுதம் தொடர்பாக குற்றச்சாட்டுகளை ஈரான் மறுத்துள்ளது. மேலும் எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பதிலடி கொடுத்துள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு உளவு பார்த்த நபர்களை கைது செய்துள்ளதாக ஈரான் அவ்வப்போது அறிவித்து வருகிறது. கடந்த 2020-ல் ஈரான் ஆயுதப்படை முக்கிய அதிகாரி ஒருவரை பற்றிய தகவல்களை அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் கசியவிட்டதாக ஒரு நபரை ஈரான் தூக்கிலிட்டது. அந்த அதிகாரி பிறகு இராக்கில் அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார்.