ஈரான் நாட்டில் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் பட்டப்பகலில் 5 பேர் தூக்கிலடப்பட்ட சம்பவம் மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானில் புதன்கிழமை, 5 பேருக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஈரான் வடமேற்கில் பெண்ணொருவரை கடத்தி கூட்டு வன்புணர்வுக்கு இரையாக்கியதாக இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
மராண்ட் நகரில் இருந்து 2022 மே மாதம் தொடர்புடைய பெண் கடத்தப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணை இந்த ஐவரும் கூட்டு வன்புணர்வுக்கு இரையாக்கியுள்ளனர். சம்பவம் நடந்த 4 நாட்களுக்கு பின்னர், இந்த ஐவரும் கைதாகியுள்ளனர்.
இவர்கள் ஐவரும் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்தவர்கள் என்பதும் விசாரணையில் அம்பலமானது.
இந்த நிலையில், விசாரணை முடிவடைந்ததை அடுத்து, இவர்கள் 5 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டு பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில், நடு வீதியில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த மாதம், கூட்டு வன்புணர்வு குற்றச்சாட்டில் ஆண்கள் மூவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
2021ல் நடந்த இச்சம்பவத்தில், விசாரணை முடிவடைந்த நிலையில், கடந்த மாதம் அந்த மூவருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனிடையே, சீனாவைப் போன்று அதிக எண்ணிக்கையிலான மரண தண்டனையை நிறைவேற்றிய நாடு ஈரான் என மனித உரிமைகள் அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
இதேவேளை, 2023ல் மட்டும் இதுவரை 282 பேர்களுக்கு ஈரான் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரையில் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை எண்ணிக்கையை விட இது இருமடங்கு என்றே தெரியவந்துள்ளது.