ஈரானுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட பாகிஸ்தான், தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஈரான் ஜனாதிபதியான Ebrahim Raisi, மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாக பாகிஸ்தான் சென்றிருந்தார். ஏப்ரல் 22ஆம் திகதி ஈரான் ஜனாதிபதியும், அவரது மனைவியும், வெளியுறவு அமைச்சர் முதலான சில அமைச்சர்களும், மூத்த அதிகாரிகளும் பாகிஸ்தான் சென்றார்கள். தற்போது அவர்கள் ஈரான் திரும்பிவிட்டனர்.
பாகிஸ்தானிலிருந்தபோதே, Ebrahim Raisi, இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். இஸ்ரேல், ஈரானைத் தாக்கும் தவறை மீண்டும் செய்தால், நிலைமை வேறு மாதிரி ஆகிவிடும், இஸ்ரேலில் மிச்சம் மீதி எதுவும் இருக்காது என்று கூறியிருந்தார் அவர்.
Ebrahim Raisi, அரசுமுறைப் பயணமாக பாகிஸ்தான் சென்றிருந்தபோது, ஈரானும் பாகிஸ்தானும் பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.
அதைத் தொடர்ந்து, ஈரானுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய விரும்பும் யாரானாலும், அவர்கள் மீது தடைகள் விதிக்கப்படும் அபாயம் உள்ளது என்பதை கவனத்தில் கொள்வது நல்லது என அமெரிக்க மாகாணங்கள் துறை செய்தித்தொடர்பாளரான Vedant Patel எச்சரித்துள்ளார்.
ஏற்கனவே பாகிஸ்தான் மீது சில தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஈரானிலிருந்து எரிவாயுக் குழாய் கொண்டு வரும் திட்டம் ஒன்றை திரும்பவும் தொடர பாகிஸ்தான் முயன்றுவருகிறது.
அமெரிக்கா தடை விதிக்கும் அபாயம் உள்ளதாலேயே அந்த எரிவாயுக்குழாய் திட்டம் தாமதமாகிவரும் நிலையில், அதற்கான தடைக்கு விதிவிலக்கு கோர திட்டமிட்டுவருகிறது பாகிஸ்தான்.
இப்படிப்பட்ட சூழலில்தான், மீண்டும் தடை விதிக்கப்படும் அபாயத்தை பாகிஸ்தான் எதிர்கொள்ள நேரலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.