ஈரானை தூண்டிவிட்டு, அதன் அணு ஆயுத பகுதிகள் மீது தாக்குதல் நடத்தும் திட்டமாக இருக்கலாம் இஸ்ரேலின் இந்த ஒற்றைத் தாக்குதல் என கூறப்படுகிறது. இஸ்ரேல் மீது கடந்த வார இறுதியில் ஏவுகணை மற்றும் ட்ரோன்களால் சரமாரி தாக்குதலை ஈரான் முன்னெடுத்தது. இதற்கு பதிலடி உடனே எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மிக சாதாரணமாக ஒரே ஒரு ஏவுகணையை இஸ்ரேல் வீசியுள்ளது.
இந்த தாக்குதலானது ஈரானில் உள்ள இஸ்ரேல் உளவாளிகளால் முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவலும் கசிந்துள்ளது. ஆனால் அமெரிக்க தரப்பில், இது இஸ்ரேல் முன்னெடுத்த தாக்குதல் என்றே உறுதி செய்துள்ளனர்.
மேலும், மேற்கத்திய ராணுவ அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கையில், இந்த தாக்குதலானது ஈரானை தவறு செய்ய தூண்டும் செயல் என்று குறிப்பிட்டுள்ளனர். ஈரான் பதிலடி தர முன்வந்தால், அதையே காரணமாக குறிப்பிட்டு, ஈரானின் அணு ஆயுத தளங்கள் மீது தாக்குதலை முன்னெடுக்கும் திட்டம் என்றும் தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி, Isfahan பகுதியில் ஈரானின் பாதுகாப்பு மிகுந்த சுரங்க அணு ஆயுத ஆலை ஒன்று அமைந்துள்ளதாக கூறுகின்றனர். ஆனால் இஸ்ரேலின் ஏவுகணை அந்த ஆலையை நேரிடையாக தாக்கியதா என்பது குறித்து உறுதியான தகவல் இல்லை.
ஈரானிய அணுசக்தி மையங்களைத் தாக்க இஸ்ரேல் திட்டமிட்டு வருவதாக கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு முன்ன்னரே தகவல்கள் கசியத் தொடங்கியிருந்தன. இது மேற்கத்திய நாடுகளின் திட்டமாக இருக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இஸ்ரேலியப் படைகள் ஆபத்தான நடவடிக்கைக்கான தயாரிப்பில் ரகசிய விமானப்படை பயிற்சிகளை நடத்துவதாகவும் கூறப்பட்டது. தற்போது ஈரானின் கழுத்தில் இஸ்ரேல் கை வைத்துள்ளதாகவும், ஈரான் பதிலடி தர முயன்றால், முழுவீச்சில் தாக்குதலை முன்னெடுக்கவும் இஸ்ரேல் திட்டமிடுவதாக கூறுகின்றனர்.