ஈரான் ஆயுதம் வழங்கி உதவுவதற்கு நன்றி என்று இசுதீன் அல்-கஸ்ஸாம் படைப்பிரிவின் செய்தித் தொடர்பாளர் அபு ஒபைதா பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலிய படைகளும் இடையே தீவிரமான சண்டை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் காசாவில் 100 க்கும் மேற்பட்டவர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்து இருப்பதாக ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
அதில் பெரும்பாலானோர் இஸ்ரேல்-காசா எல்லையில் நடைபெற்ற இசை திருவிழாவில் கலந்து கொண்ட வெளிநாட்டினர் என ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
அதே சமயம் வெளிவந்த மற்றொரு தகவலில், ஹமாஸ் அமைப்பினர் கிட்டத்தட்ட 130 இஸ்ரேலியர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்து இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இசுதீன் அல்-கஸ்ஸாம் படைப்பிரிவின் செய்தித் தொடர்பாளர் அபு ஒபைதா பேசும் வீடியோ ஒன்றில், எங்களுக்கு ஆயுதம், பணம், மற்றும் பல உபகரணங்களை தந்து உதவும் ஈரானுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் சியோனிஸ்ட்(Zionist) கோட்டைகளை தகர்த்தெறிய அவர்கள் எங்களுக்கு ஏவுகணைகளை தந்துள்ளனர்.
அத்துடன் அவர்கள் தொட்டி எதிர்ப்பு ஏவுகணைகளையும் தந்து உதவியுள்ளனர் என இசுதீன் அல்-கஸ்ஸாம் படைப்பிரிவின் செய்தித் தொடர்பாளர் அபு ஒபைதா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளிவந்த வீடியோவின் நம்பத்தன்மை எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.