தமிழக நண்பர்கள் பலருக்கு ஒரு உண்மை புரியவேயில்லை. 99 விழுக்காடு தமிழீழ மக்கள் நாம் தமிழர் கட்சியை ஆதரிக்கத்தான் செய்கிறார்கள். சமூக வலைத் தளங்களில் சில ஈழத் தமிழர்கள் சீமானைக் கழுவி ஊத்துவதை வைத்து தமிழீழ மக்கள் சீமானை எதிர்ப்பதாக இவர்கள் கற்பனை செய்து கொள்கிறார்கள்.
இந்த ஆதரவு பலரும் நம்புவது போன்று அரசியல் ரீதியானது அல்ல – அது உளவியல் சார்ந்தது – கூடவே ஒரு நன்றி உணர்வு சார்ந்ததும் கூட.
தமிழின அழிப்பு நடந்து முடிந்து இன்று வரை எமக்கு நீதி கிடைக்காதது மட்டுமல்ல சம்பந்தப்பட்ட உள்ளக / வெளியக சக்திகள் யாருமே தண்டிக்கப்படவுமில்லை.
இது எங்கள் மக்களை கூட்டு மன அதிர்வுக்குள்ளாக்கி மன நோயாளிகளாக்கியே வைத்திருக்கிறது. அதில் ஓரளவு மனத் தெம்பைக் கொடுத்த ஒரு நபராக சீமானை எமது மக்கள் மதிக்கிறார்கள். காரணம், தமிழின அழிப்பின் தமிழகக் குற்றவாளியான கருணாநிதியை அவர் சாகும்வரை பதவியில் ஏற விட மாட்டேன் என்று சபதமிட்டு அதை நடை முறையில் சாதித்தும் காட்டினார் ( இது பலரின் உழைப்பு . ஆனால் எமது மக்கள் அது சீமானின் முயற்சி என்றே நம்புகிறார்கள்).
ஒருத்தராவது தண்டிக்கப்பட்டாரே என்று எமது மக்கள் நம்புவது எமது மக்களின் ஊனமுற்ற உளவியலுக்கு ஒரு ஒத்தடமாக மாறியது.
அடுத்து 2009 மே இற்கு பிறகு புலி அரசியலை அடியோடு அழித்தொழிக்க புலி நீக்க – நினைவு அழிப்பு அரசியலை எதிரிகள் தீவிரமாக முன்னெடுத்த போது களத்திலோ , புலத்திலோ தோல்வி உளவியலின் காரணமாகவும் / அச்சம் நிமித்தமும் அதற்கு எதிர்வினை ஆற்ற முடியாத ஒரு சூழலில் சீமான் தெரிந்தோ , தெரியாமலோ அதற்கு ஒரு எதிர்வினை ஆற்றுவது போல் தனது கட்சியை வளர்த்தெடுத்தார்.
இவையெல்லாம் எமது மக்களை அவரை நோக்கி இயல்பாகவே உந்தித் தள்ளியது.
நாம் தமிழர் கட்சிக்கும் தமிழீழ மக்களுக்குமான உறவின் உள்ளடக்கம் இவ்வளவுதான்.
பலர் சொல்வது போல் சீமானை ஒரு மீட்பராக / தமக்கு நாடு பிடித்துத் தரப் போவதாக ஒரு தமிழீழக் குடிமகனும் நம்பவில்லை. அப்படிச் சொல்லவுமில்லை. இது பலரின் மிகை கற்பனை.
நிலைமை இப்படியிருக்க, உறுதிப்படுத்த முடியாத ஒரு குரல்ப் பதிவை தேர்தலுக்கு இரண்டு நாளுக்கு முன்பு வெளியிட்டு விட்டு ‘அவரை எதிர்’ என்றால் தமிழீழ மக்கள் சிரிக்கத்தான் செய்வார்கள். இது ஏனோ தமிழக நண்பர்கள் சிலருக்குப் புரியவில்லை.
ஒரு வாதத்திற்கு அது உண்மை என்று வைத்துக் கொண்டாலும் தமிழ்ச் சூழலில் தலைவரையே கழுவி ஊத்தும் அரசியல்வாதிகள்/ ஆய்வாளர்கள்/ சில போராளிகளை மக்கள் எதிர்கொண்டபடி அவர்களுடன் மக்கள் புழங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
அவ்வளவு ஏன், புலிகளை பயங்கரவாதிகள் என்று கட்டமைத்திருக்கும் ஐநா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற சக்திகளிடம் கூட தேவை கருதி தற்காலிக சமரசம் செய்துள்ளார்கள் எமது மக்கள்.
இவை எதுவும் புரியாமல் தத்துவம், கோட்பாடு என்று நீட்டி முழக்கி சீமானை எதிர்க்கச் சொல்வது அயர்ச்சியாக இருக்கிறது.
மேலே குறிப்பிட்டது போல் சீமானுக்கான எமது மக்களின் ஆதரவு என்பது ஒரு நன்றியின் பாற்பட்டது. ஆட்சியிலிருந்து சீமானால் தமிழீழத்திற்காக ஒன்றும் புடுங்க முடியாது என்பது எமது மக்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே இதை யாரும் குழப்பிக் கொள்ளத் தேவையில்லை.
தமிழ்த் தேசியம் என்பது பல பாதைகளைக் கொண்டது. அதில் தேர்தலும் ஒரு பாதை. அதற்கென்று சில வரையறைகள் இருக்கிறது. அதுவே முடிவானதல்ல. இது புரியாமல் தேர்தல் அரசியலில் ஈடுபாடு காட்டாதவர்கள் அதைக் காயடிப்பது சிறுபிள்ளைத்தனம்.
இறுதியாக, நாம் தமிழர் கட்சி தமிழகத்தைப் பொருத்த வரையில் அழித்தொழிக்கப்பட வேண்டிய ஒரு கட்சியாக இருக்கலாம். அது குறித்த அறிவோ/ போதிய புரிதலோ நமக்கு இல்லை.
ஆனால் ஈழ அரசியலுக்கு நாம் தமிழர் கட்சியால் எந்தப் பின்னடைவும் இல்லை. சில நன்மைகள்தான் இருக்கிறது. ஒரு தமிழகக் கட்சியால் அழிந்து விடும் நிலையில் ஈழ அரசியலும் இல்லை.
எனவே தமிழக உறவுகள் சீமானை எதிர்ப்பதென்றால் எதிர்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் உரிமை. அதற்கு ஈழ அரசியலைத் துணைக்கழைக்காதீர்கள்.
-பரணி கிருஸ்ணரஜனி-