ஈழத்தமிழர்களின் பின்போர்க்கால வாழ்வியலைச் சித்தரிக்கும் அபூர்வமான திரைப்படைப்பாகப் பலத்த வரவேற்பை சினம்கொள் என்ற முழு நீள ஈழத்திரைப்படம் (ஜனவரி3) உலகெங்கும் 20 நாடுகளில் 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.
இத்திரைப்படத்தின் இயக்குநரான ரஞ்சித் ஜோசப் தனது மதிநுட்பமான திரையாடலால் இலங்கை ஒற்றையாட்சி அரசு தமிழ்க்கலைஞர்கள் மீது விதித்திருக்கும் மூன்று நிர்ப்பந்தங்களுக்கூடாகவும் சுழியோடியிருக்கிறார்.
அது மட்டுமல்ல, பதினோர் இடங்களில் ஒலியைச் சற்றே தணிக்கை செய்தால் போதும் என்ற நிபந்தனையோடு இந்தியாவின் தணிக்கைக் குழுவின் அங்கீகாரத்தை வென்றெடுத்த முதலாவது ஈழத்தமிழர் போராட்டம் சார்ந்த திரைப்படைப்பாகவும் சினம்கொள் விளங்குகிறது.
முழுமையாக ஈழத்தமிழ்க் கலைஞர்களின் நடிப்பில் வடக்கின் மூன்று மாவட்டங்களில் எழுபது இடங்களில் சினம்கொள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
தமிழகத் திரையுலகத்தின் புகழ்மிகு இயக்குநர் பாரதிராஜாவும் இயக்குநர் வெற்றிமாறனும் பிரபல திறமை நடிகர் நாசர் அவர்களும் சினம்கொள் தயாரிப்பை வியந்து பாராட்டியுள்ளனர்.
பின்போர்க்காலத்து வன்னியின் துணிகரமான இளம் எழுத்தாளர்களில் ஒருவராக அறியப்பட்டிருக்கும் தீபச்செல்வன் சினம்கொள் திரைப்படத்தின் வசனத்தை அமைத்திருக்கிறார்.
தோல்விமனப்பான்மைக்குப் பலியாகித் தமது படைப்பாற்றலை ஆற்றுப்படுத்த இயலாது தத்தளித்துக்கொண்டிருக்கும் கலைஞர்களால் அல்லற்படுவதல்ல ஈழத்தமிழர் தேசம் என்ற செய்தியைச் சொல்லவந்திருக்கின்ற புதிய தலைமுறைப் படைப்பாளியாக கனடாவில் வசிக்கும் ஈழத்து இயக்குநர் ரஞ்சித் ஜோசப் அவர்களைக் காணமுடிகிறது.
பங்கேற்ற பெரும்பாலான நடிகர்களுக்கு இதுவே முதல் திரைப்பட நடிப்பாக இருந்தபோதும், எங்குமே சலிப்புத் தட்டாத வகையில், இயல்பான நடிப்போடு, உயிரோட்டத்துடன் பார்ப்போரின் கவனத்தை முடிவுவரை ஈர்த்து வைத்திருக்கும் படைப்பாக, சினம்கொள் வெளிப்படுகிறது.
ஈழத்தமிழ் மக்களின், அவர்தம் முன்னாள் போராளிகளின், தற்கால வாழ்வியலை உலக மானுடத்துக்கும் தமிழர்களின் அடுத்த தலைமுறைக்கும் எடுத்தியம்பும் மண்சார்ந்த படைப்பொன்றை ஆக்கவேண்டும் என்ற தனது பல வருட உந்துதலின் வெளிப்பாட்டைத் தருணம் தவறாமல் செய்து முடித்திருக்கிறார் ரஞ்சித்.
இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற எழுபதுக்கும் மேற்பட்ட இடங்கள் அத்தனையும் தமிழீழ விடுதலைப் போராட்டம் நடைபெற்ற காலத்தின் முக்கியமான சம்பவங்கள் நடந்த இடங்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.