இலங்கையில் தொடர்ச்சியாகத் தமிழ் மக்களின் உரிமைகள் மீறப்பட்டுவரும் நிலையில்,அவர்களுக்கான நீதியையும், இழப்பீட்டையும் பெற்றுக்கொடுப்பதை உறுதி செய்வதற்கு சர்வதேச ரீதியில் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.”
இவ்வாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையார் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மூன்று தசாப்த காலமாக இடம்பெற்ற போர் நிறைவுக்கு வந்து 11 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், அவர் வெளியிட்டுள்ள காணொளி ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:-“இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போரின்போது உயிரிழந்தவர்களை நினைவுகூருகிறேன். இந்த நீண்டகாலப் போரில் சுமார் ஒரு இலட்சத்து 46 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் உயிரிழந்தார்கள்.
எனவே, அவ்வாறு உயிரிழந்த தமிழர்களை இந்நாளில் நினைவுகூரும் அதேவேளை, தொடர்ந்தும் நீதி, சுதந்திரம் மற்றும் இழப்பீடு ஆகியவற்றை முன்னிறுத்திய அவர்களது போராட்டங்களால் கவரப்பட்டுள்ளோம்.
ஐக்கிய நாடுகள் சபையால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் இறுதிப்போரின் போது போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாகக் கூறப்பட்டாலும், இன்னமும் இது குறித்த முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுப் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை.
மாறாக சிறுவர் உட்பட எண்மரைப் படுகொலை செய்த குற்றத்துக்காக நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்ட ஒரு முன்னாள் இராணுவ அதிகாரிக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார். இது நீதிக்குப் புறம்பானதாகும்.
இலங்கையில் இன்னமும் தமிழர்களின் உரிமைகள் தொடர்ச்சியாக மீறப்பட்டு வருகின்றன.
படையினரால் கைப்பற்றப்பட்டப் பொதுமக்களின் காணிகள் இன்னமும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை.
இலங்கையின் தேசிய கீதத்தைத் தமிழ்மொழியில் பாடுவது புறக்கணிக்கப்பட்டுள்ளது.அத்தோடு இன்னமும் 200 பேர் வரையில் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தொடர்ச்சியாகத் தமிழ் மக்களின் உரிமைகள் மீறப்பட்டுவரும் நிலையில்,அவர்களுக்கான நீதியையும், இழப்பீட்டையும் பெற்றுக்கொடுப்பதை உறுதிசெய்வதற்கு சர்வதேச ரீதியில் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.