தமிழீழ விடுதலைப் போராட்டம் முளைவிட்ட காலம் தொட்டே தமிழ்நாடு எந்த வித சமரசத்திற்கும் ஆட்படாமல் ஆதரவு சக்தியாக விளங்கி இருக்கிறது. நேரடியாக யுத்தத்தில் பங்கேற்று வீரச்சாவடைந்த மாவீர்களுள் தமிழ்நாட்டு இளைஞர்களும் உண்டு. சிறை சென்ற தலைவர்களும் சாமானியர்களும் உண்டு. இன்றுவரையில் தமிழீழ கனவில் தன் வாழ்நாள் முழுதும் களமாடும் மூத்த தலைவர்களும் உண்டு.
2013 மார்ச் மாதம் எட்டாம் நாள் சென்னையில் கிளந்தெழுந்த மாணவர் போராட்டத்தின் தாக்கம் தமிழகம் முழுதும் கொழுந்துவிட்டு எரிந்த போது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஐயா. வைகோ அவர்கள் போராட்டம் வீரியமடைந்து இருக்கிறது ஆனால் இலக்கை நோக்கி துல்லியமாக நகர்ந்தால் வெற்றி நிச்சயம் என சொல்லி,
1, ஈழத்தமிழர் பிரச்சனைக்கு தமிழீழம் மட்டுமே தீர்வு.
2, இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணை வேண்டும்.
3, தனிநாடு கோரிக்கை குறித்து ஈழத் தமிழர்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதில் நாடுகடந்த தமிழீழ மக்களும் வாக்களிக்கும் படி வழிவகை செய்ய வேண்டும்.
என்பன போன்ற வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானங்களை வரையறுத்துத் தந்தார்கள்.
அவற்றை 2013 மார்ச் 25ஆம் நாள் தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு சார்பில் சென்னை, பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் முன் மொழிந்தேன்.
அந்த தீர்மானங்களைத்தான் 2013 மார்ச் 27ஆம் நாள் அன்றைய தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்கள் சட்டமன்றத்தில் நிறைவேற்றி மாணவர்கள் தங்கள் போராட்டங்களை கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
பன்னெடுங்காலமாக “தனி ஈழம்” என்பதே தமிழ்நாட்டில் முழக்கமாக இருந்தாலும் அன்று முதல் ஒட்டு மொத்த தமிழக மக்களின் அதிகாரப்பூர்வ அறைகூவலாக விளங்குகிறது. இந்த கருத்தியலை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் செயலில் மாணவர் கூட்டமைப்பு சமரசமின்றி செயல்படுகிறது.
இந்தச் சூழலில் செல்லும் நாடுகளிலெல்லாம் உலகத் தமிழர்களால் துரத்தி அடிக்கப்படும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பதிமூன்றாம் சட்டத்திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என சென்னை, பெரியார் திடலில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் மாநாடு ஏற்பாடு செய்திருப்பதாய் வீரகேசரி இதழில் செய்தி கொடுத்திருந்தார். ஆனால் தமிழக அரசியல் தலைவர்கள் யாரும் தங்களுக்கு அப்படி ஒரு அழைப்பு இல்லை என்றார்கள். பொய்யான தகவலை பத்திரிக்கை செய்தியாக கொடுத்துவிட்டு அதே நாளில் சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தி உள்ளார்.
சுமந்திரன் உட்பட ஏனைய இலங்கை அரசியல் சக்திகளுக்கு நாங்கள் சொல்ல விரும்பும் கருத்து ஒன்று தான். தனி ஈழம் என்ற கோரிக்கையை நீர்த்துப் போகச் செய்யும் சமஸ்டி உரிமை, மாகாண உரிமை, மாவட்ட உரிமை என்று எந்த கருத்தை வேண்டுமானாலும் இலங்கையிலோ அல்லது வேறு ஏதேனும் நாடுகளுக்கோ சென்று பேசுங்கள் அது உங்கள் உரிமை. ஆனால், சிங்கள பேரினவாத அரசுக்கு சாமரம் வீசும் கையோடு தமிழ்நாட்டிற்கு வந்து இங்கு இருப்பவர்களை குழப்பும் வேலையை செய்ய வேண்டாம். முத்துக்குமார் மூட்டிய நெருப்பு இன்னும் இங்கு அணையவில்லை என்பதையும் இன உணர்வு மங்கிப் போய் விடவில்லை என்பதையும் மனதில் கொள்ளுங்கள்.
– பாரி மைந்தன்,
தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு.