ஈழத்தமிழ் இளைஞன் தற்கொலை – அவுஸ்திரேலியாவின் கொள்கைகளே காரணம்!

You are currently viewing ஈழத்தமிழ் இளைஞன் தற்கொலை – அவுஸ்திரேலியாவின் கொள்கைகளே காரணம்!

ஈழத்தைச் சேர்ந்த தமிழ்  புகலிடக்கோரிக்கையாளர் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் புகலிடக்கொள்கையே அவரின் மரணத்திற்கு காரணம் என தமிழ் அகதிகள் பேரவை தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ் அகதிகள் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது,

தன்னைத் தானே தீக்கிரையாக்கிக் கொண்டு இளைஞன் மரணம். 23 வயதேயான இந்த இளைஞனை ஆஸ்திரேலியா அரசாங்கமும், அரசாங்கத்தின் அகதிகள் மீதான மோசமான கொள்கைகளுமே படுகொலை செய்துள்ளது.

அவனது மரணப்படுக்கையின் கடைசி நொடிகளில் அவரோடு கூட இருந்த ரதி கூறியது இதுதான். “பல எதிர்கால கனவுகளோடும்,  வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற லட்சியத்தோடும் வாழ்ந்த 23 வயதான இளைஞன் மனோ. உள்நாட்டுப் போரில் பாதுகாப்புத் தேடி வந்த ஒரு இளைஞனை இந்த நாட்டின் மனிதத் தன்மையற்ற அகதிகளுக்கு விரோதமான போக்கு, அதன் மூலம் அவன் சந்தித்த தனிப்பட்ட, சமூகப் பிரச்சனைகள் வாழ்வின் மீதான நம்பிக்கை இழக்கச் செய்ததோடு இனி வாழ்வதே வீணென்று இத்தகைய பாரதூரமான முடிவை எடுக்கச் செய்துள்ளது.

கடந்த 12 ஆண்டுகளில் எத்தனையோ அப்பாவி அகதிகளின் அகால மரணங்களை நாங்கள் கடந்து வந்துள்ளோம் . இதோ இன்று இன்னொரு இளைஞன்.  இன்றைக்கு போராடிக் கொண்டிருக்கும் பல தமிழ் அகதிகள் போல் பாதுகாப்பற்ற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு ஒவ்வொரு நாள் விடியலையும் தங்களுக்கு மாற்றம் ஏற்பட்டு விடும் என்று கனவுகளோடு; இங்கிருந்து ஆபத்து நிறைந்த தங்கள் நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டு விடுவோமோ என்ற பயத்தோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் பல அகதிகளின் ஒருவரின் மரணம் இது.”

கிறிஸ்துவ குடும்பத்தை பின்னணியாகக் கொண்ட மனோ தமிழர்களின் மீதான இனவழிப்பு போரின் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு குடும்பமாக தனது பன்னிரண்டாவது வயதில் அவரது நான்கு சகோதரர்களோடு 2013 ஆம் ஆண்டு கப்பல் வழிப் பயணத்தால் ஆஸ்திரேலிய வந்தடைந்தார்.  இங்கு வந்து பல மாத தடுப்பு காவலுக்கு பிறகு சமூகத்திற்கு விடுவிக்கப்பட்டார்.

செவ்வாய் அன்று தனக்குத்தானே தீயிட்டுக் கொளுத்தி 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில்( Alfred Hospital, Melbourne) அனுமதிக்கப்பட்ட இன்று 12:27 மணி அளவில் தன் மூச்சை நிறுத்திக் கொண்டான் அந்த இளைஞன்.

மகிழ்ச்சியாக சாமானியமான வாழ்க்கையை வாழ வேண்டிய ஒரு இளைஞனை இத்தகைய மன உளைச்சலுக்கு உள்ளாக்கி அவன் தனது உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு தள்ளியுள்ளது இந்த நிரந்தரமற்ற அகதி வாழ்க்கை.

ஆஸ்திரேலியா அரசாங்கம் இத்தனை ஆண்டுகளாகியும் தஞ்ச கோரிக்கையை அங்கீகரிக்காத பட்சத்தில் மேலும் இலங்கைக்கு அகதிகளை அனுப்ப முற்படும் என்றால் இங்கிருந்து மரணிப்பதே மேல் என்று பல அகதிகள் எண்ணங்கள் மாறி இருப்பது அவர்கள் வாழ்வின் மீதான பேர் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.‌ இத்தகைய சோர்வடைந்த வார்த்தைகள் வெறும் வார்த்தைகள் அல்ல உண்மையான மனநிலை என்று ஒரு இளைஞன் தன் உயிரைத் தீக்கிரையாக்கி உணர்த்திச் சென்றுள்ளான் அனைவருக்கும். ஒரே மாதத்தில் இரு அகதிகளை இழந்துள்ளோம். இது இதோடு முடியப்போவதும் இல்லை என்ற பயம் எங்கள் அனைவரையும் ஆட்கொண்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply