கொரோனா கெடுபிடிகளால் வடகிழக்கு தமிழர் தாயகத்தில் ஆலயங்கள் முடங்கியுள்ள நிலையில் ஈழத்தின் நாதஸ்வர, தவில் கலைஞர்கள்; உருக்கமான வேண்டுகோள ஒன்றினை விடுத்துள்ளனர்.
கொரோனா காரணமாக ஈழத்து நாதஸ்வர,தவில் கலைஞர்களாகிய தாம் பெரிதும் நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளதாக குறிப்பிடுகிறார்கள்.
தாங்கள் உழைக்கும் காலம் பங்குனி முதல் ஆவணி வரையான ஆறு மாதமே என கூறும் அவர்கள் அடுத்த ஆறு மாத காலமும் உழைத்த பணத்தை சேமித்தே தமது வாழ்வாதாரத்தை கொண்டு நடத்துவதாக குறிப்பிடுகின்றார்கள்.
கொரோனாவினால் கடந்த இரண்டு மாதமாக தாம் பெரும் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர். கோவில் திருவிழாக்கள், திருமண நிகழ்வுகள் போன்ற எதுவும் நடைபெறாத நிலையில் தமது வாழ்வாதாரத்தை கொண்டு நடாத்த முடியாத நிலை காணப்படுவதாக குறிப்பிடுகின்றனர்.
எனவே அரசாங்கம் தமது இக்கட்டான நிலையை கவனத்தில் கொண்டு தமது வாழ்வாதாரத்தில் வளர்ச்சியை ஏற்படுத்தும் முயற்சியை மேற்கொள்ளவேண்டும் என அவர்கள் சார்பில் முன்னணி கலைஞர் பஞ்சமூர்த்தி குமரன் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.