ஈழத் தமிழரின் தேச கோட்பாட்டை தன் அரசியல் செயற்பாட்டின் மூலமாக இன்றும் தாங்கி நிற்கும் கஜேந்திரகுமார்!

You are currently viewing ஈழத் தமிழரின் தேச கோட்பாட்டை தன் அரசியல் செயற்பாட்டின் மூலமாக இன்றும் தாங்கி நிற்கும் கஜேந்திரகுமார்!

ஈழத் தமிழரின் தேச கோட்பாட்டை தன் அரசியல் செயற்பாட்டின் மூலமாக இன்றும் தாங்கி நிற்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமே எம் இனத்தின் பலம்.

“ஒரு நாடு இரு தேசங்கள்” எனும் அரசியல் கோட்பாடு ஈழத் தமிழினத்தின் அரசியல் கோட்பாடாக வரலாற்றை ஊடறுத்து நிற்கிறது.

ஈழ விடுதலைப் போராட்ட அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி நின்ற திம்புக் கோட்பாட்டின் மூலம் இதனை விளங்கிக்கொள்ள முடியும்.

(1) recognition of the Tamils of Ceylon as a nation.(ஈழத் தமிழர்களை ஒரு தேசமாக அங்கீகரித்தல்)

(2) recognition of the existence of an identified homeland for the Tamils of Ceylon. (ஈழத் தமிழர்கள் ஒரு வரலாற்று தாயகத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அங்கீகரித்தல்)

(3) recognition of the right of self determination of the Tamil nation. (தமிழ் தேசத்திற்கான சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்தல்)

இவ்வாறாக ஓர் இனக் குழும மூலத்திலிருந்து தோன்றிய ஈழத் தமிழர்கள் பொதுமொழி அடிப்படையில் ஒரு இனமாக ஒருங்கிணைந்து வளர்ந்து கால வளர்ச்சியில் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் பொது மொழியும் பொது பண்பாடும் கொண்டு நிலைத்து விட்ட சமூகம் ஒரு தனித்துவமான தேசிய இனமாகவும் இருந்து வருகிறார்கள்.

“ஒரு தேசிய இனம் தனக்கான தேசத்தை நிறுவிக்கொள்ளும் உரிமையை புறப்புரிமையாக கொண்டுள்ளது. Iஇதுவே சுய நிர்ணய உரிமையாகும்.”என்கிறார் லெனின்.

தேசம் என்றால் என்ன?
“தொடர்ச்சியான நிலப்பரப்பில் ஒரு பொது மொழியும் பொதுப் பொருளாதார வாழ்வு பொதுப் பண்பாடும் அப்பண்பாட்டில் உருவான உளவியல் உருவாக்கமும் கொண்டு வாழ்ந்து வரலாற்றில் நிலைத்து விட்ட ஒரு சமூகமே ஒரு தேசம்” என்கிறார் ஸ்டாலின்.

இவ்வாறு தாயக மண், பொதுவான மொழி, பொருளாதாரம் ஆகியவற்றுடன் பொதுப் பண்பாட்டினூடாக வெளிப்படும் ‘நாம்’ என்ற சமூக உணர்வுடன் கூடிய தேசிய இன ஒற்றுமை உளவியல்பு என்பவை ஒரு தேசத்தின் புறநிலை அம்சங்களாகும்.

மேற்குறித்த நான்கு புறநிலைஅம்சங்களையும் இயல்பாகவே ஈழத் தமிழர்கள் கொண்டுள்ளமையினாலேயே தமிழர் தேசம் காலத்துக்கு காலம் அந்நியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்ட போதும் ஈழத் தமிழர்கள் தேசத்திற்குரிய புறநிலை அம்சங்களின் அடிப்படையில் தனித்துவம் குன்றாது ஒரு நிலையான சமூகமாக தமக்கான நிலப்பரப்பில் தொடர்ந்தும் வாழ்ந்து வருகிறார்கள்.

இதே வகையில் ஒரு தேசத்தின் அகநிலை அம்சங்கள் பற்றி Ernest Renan பின்வருமாறு கூறுகிறார்.

‘“Suffered together”, I said, for shared suffering unites more than does joy. In fact, periods of mourning are worth more to national memory than triumphs because they impose duties and require a common effort.’

“A nation is therefore a great solidarity constituted by the feeling of sacrifices
made and those that one is still disposed to make.”

தேசம் என்பது ஒருவர் செய்த தியாகத்தினை ஒருவர் மீண்டும் செய்வதற்கு தயாராயிருக்கும் மன உணர்வின் பால் கட்டமைத்த மாபெரும் ஒற்றுமையாகும். அது கடந்த காலத்தை நினைவில் கொள்கிறது. மேலும் தேசமானது நிகழ்காலத்தில் தொடர்வதற்கான பொது வாழ்க்கையைக் கட்டமைப்தற்கான வகையில் தெளிவாக வெளிப்படுத்தப்படும் அங்கீகாரம் விருப்பு ஆகிய உறுதியான செயல்பாடுகள் மூலம் தன்னை புதுப்பித்துக் கொள்கிறது. ஒரு தேசத்தின் இருப்பு என்பது நித்திய பொது உளப்பாங்கின் வெளிப்பாடாகும்.

இதனையே பேராசிரியர் James G Kellas

“வரலாறு கலாச்சாரம் பொது பரம்பரியம் என்ற பதங்களினால் பிணைக்கப்பட்டு இருக்கும் ஒரு இனமாக தம்மை உணரும் மக்கள் குழுவே ஒரு தேசியம் ஆகும்.தேசியமானது ஒரு பிரதேசம் ஒரு மொழி ஒரு மதம் ஒரு பொது வம்சாவளி என்பவற்றை உள்ளடக்கக்கூடிய புறநோக்கு இலட்சணங்களையும் அத்தியாவசியமாக தமது தேசியத்துடனான ஒரு மக்களின் அது பிரக்ஞை அத்தேசியத்திற்கான பாசம் என்ற அகநோக்கு இலட்சணங்களையும் கொண்டது.” எனவும்

“எல்லாவற்றிற்கும் முடிவில் அது தமது தேசத்துக்காக உயிரை கொடுக்க தயாராய் உள்ள மக்களின் அதியுயர்ந்த விசுவாசம் ஆகும்.”

எனவும் குறிப்பிடுகிறார்.

இவ்வாறு எமது போராளிகளும் மக்களும் செய்த அளப்பரிய தியாகங்களை நினைவு கூர்ந்து வரலாற்றின் ஊடாக அவற்றைக் கடத்தி அத் தியாகங்களின் அடிப்படையில் எம்மிடையே நிலை கொண்டுள்ள கூட்டு உணர்வுடனான ஒற்றுமை எம்மை ஒரு தனித்துவமான தேசம் ஆக்குகிறது. அது மட்டுமன்றி நிகழ்காலத்தில் தொடர்வதற்கான பொது வாழ்க்கையை கட்டமைத்துக் கொள்ளும் வகையில் கூட்டுணர்வுடன் வெளிப்படுத்தப்படும் அங்கீகாரம் விருப்பு என்பன தியாக தீபத்தின் நினைவு தினம், மாவீரர் தினம் மே 18 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தினம் ஈழத் தமிழினத்தின் மீது சிங்கள பௌத்த பேரினவாத அரசு நடத்திய இனப்படுகொலைகள், தேசக் கட்டுமானத்தைச் சிதைக்கும் வகையில் ஸ்ரீ லங்கா அரசு தனது அரச திணைக்களங்கள் மூலம் திட்டமிட்ட வகையில் செய்யும் நில அபகரிப்புக்கு எதிரான தொடர் போராட்டங்கள் என இன்று வரை விரிந்து செல்கின்றது.

ஆயுதப்போராட்டம் மௌனிப்பிற்கு பின்பதான, அதாவது 2009 மே 18 க்கு பின்பதான தமிழர் அரசியலில் தமிழ் தேசத்தினது கோட்பாட்டு அரசியலையும் செயற்பாட்டு அரசியலையும் அரசியலையும் காவி நிற்பதும் தாங்கிச் செல்வதும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மட்டுமே.

கடந்த 14 வருடங்களுக்கு மேலாக சிங்கள பௌத்த பேரினவாதத்தினதும் போலித் தமிழ்த் தேசிய தலைமைகளினதும் தமிழத் தேசிய அரசியல் நீக்கத்திற்கு எதிராக ஒற்றைத் தலைமையாக நின்று போராட்டங்களை வழிநடத்தி வருகின்றார்.

தலைவன் என்பவன் 10 கட்சிகளை எதிர்த்து நின்று அரசியல் செய்பவன் அல்ல. அதே 10 கட்சிகளும் எதிர்க்க தனியொருவனாக நின்று கட்சியின் தலைமையை ஏற்று நடத்துபவனே தலைவன்.

-சட்டத்தரணி காண்டீபன்-

பகிர்ந்துகொள்ள

Leave a Reply