மனிதவுரிமைகள் மீறல்களிலும் இனவழிப்பு நடவடிக்கைகளிலும் இருந்து தம்மைப் பாதுகாக்கவென்று புலம்பெயர்ந்து வந்து அகதி அந்தஸ்துக்கான கோரிக்கை வைத்திருக்கும் ஈழத் தமிழர்களை நாடுகடத்தும் செயற்பாடுகளை ஜேர்மனி உடனடியாக நிறுத்தி அவர்களுக்கான வாழ்வாதாரத்தை நிலை நிறுத்த வேண்டும் என ஜேர்மனியில் இருந்து இயங்கும் ஈழத்தமிழ் மக்களவை மற்றும் ஜேர்மனி தமிழ் இளையோர் அமைப்பு என்பன வலியுறுத்தியுள்ளன.
இது தொடர்பில் இரு அமைப்புக்களும் இணைந்து கூட்டாக ஜேர்மனிய அமைப்புக்கு விடுத்துள்ள கோரிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தனிநபர் உரிமைகளையும் மனிதவுரிமைகளையும் மதிக்கும் என்று அதீத நம்பிக்கையைக் கொண்ட நாடாக ஈழத் தமிழ் மக்கள் நேசிக்கும் நாடுகளில் ஒன்றான ஜேர்மனிய நாடும் அதன் அரசும் தன் இரு முகங்களை தனது இரு அமைச்சகங்களுக்கூடாக வெளிக் கொண்டு வந்து கொண்டிருப்பது எமக்கு பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ப்தியையும் தருகின்றது. விலாங்கு மீனைப் போல பாம்புக்கு வாலையும் மீனுக்குத் தலையையும் காட்டி இரட்டை வேடமிட்டுக் கொள்கிறதா? ஜேர்மனி என்று எமக்கு சந்தேகத்தை எழுப்புகிறது இச்செயற்பாடுகள்.
ஜேர்மனிய அமைச்சுக்களில் ஒன்றாக இருக்கும் சர்வதேச வெளிவிவகாரங்களுக்கான அமைச்சு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் நாள் ஜெனீவாவில் நடைபெற்ற மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் மாநாட்டில் ஐக்கியநாடுகள் சபையின் மனிதவுரிமைகள் ஆணையகத்தால் கொண்டுவரப்பட்டிருந்த, சிறீலங்காவில் நடந்த உள்நாட்டுப் போரில் மனிதவுரிமைகள் மீறப்பட்டது என்ற தீர்மானத்துக்கு ஆதரவளித்தது ஜேர்மனிய அரசின் வெளிவிவகார அமைச்சு. அதனூடாக சிறீலங்காவில் மனிதவுரிமைகள் அன்று ஆட்சியில் இருந்த மகிந்தராஜபக்ச அரசால் மீறப்பட்டது என்று கூறியது. அத் தீர்மானத்தில் இருந்த சரத்துக்களை முழுமையாக ஏற்று அத் தீர்மானத்துக்குத் தனது ஆதரவை வழங்கியது.
அதேநேரம், தமிழீழ விடுதலைப் போர் மௌனிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் மண்ணில் நடத்திய இனவழிப்பு முடிவுறாது தொடரும் இன்றைய சூழலில், இன்றும் ஆட்சியில் இருந்து கொண்டு சிறீலங்காவில் இராணுவ ஆட்சி அதிகாரத்தை நடைமுறையில் வைத்துக் கொண்டு இனவழிப்பின் தொடர்ச்சியையும் மனிதவுரிமைகளையும் மீறிக் கொண்டு இருக்கும் மகிந்த மற்றும் கோட்டபாய சகோதரர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்றார்கள். அவர்களால் இன்றும் திட்டமிட்டு நடாத்தப்பட்டுவரும் இனவழிப்பு நடவடிக்கையில் இருந்து உயிர் தப்பி வாழ்வதற்காக தாய்நாடு விட்டு தப்பி வந்து அகதி அந்தஸ்து கோரிக்கை விடுத்திருந்த ஈழத்தமிழ் மக்கள் பலரின் கோரிக்கையை நிராகரித்தது மட்டுமல்லாது நாடுகடத்தும் செயற்பாட்டை முன்னெடுத்துவருகிறது ஜேர்மனிய அரசின் உள்துறை அமைச்சு.
இவ்விரண்டு செயற்பாடுகளும் ஒன்றுக்கொன்று முரணாகி ஜேர்மன் அரசின் இவ்விரட்டை முகம் எமக்கு அச்சத்தையும் அதிர்ச்சியையும் தருகின்றது. கடந்த மார்ச் 30 ஆம் நாள் (30.03.2021 ) ஒரு தொகுதி ஈழத் தமிழ் உறவுகளை கைது செய்து Düsseldorf விமான நிலையம் ஊடாக பல எதிர்ப்புக்களுக்கும் மத்தியில் நாடுகடத்தி இருந்தது. அதன் தொடர்ச்சியாக மீண்டும் ஒரு நாடுகடத்தல் முயற்சிக்கு தயாராகி வருகிறது ஜேர்மனியின் உள்துறை அமைச்சகம்.
அதன் அடிப்படையில் குறிப்பாக Nordrhein-Westfalen மற்றும் Baden-württemberg மாநிலத்தில் எமது உறவுகள் பலரைக் கைது செய்தும், பல உறவுகளை கைது செய்வதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றது மாநிலக்காவல்துறை. இதில் குறிப்பிட்டுக் கூற வேண்டிய விடயம் ஒன்று இருக்கின்றது. இவ்வாஆன கைது முயற்சியின் போது தமிழீழ உறவு ஒன்று தன்னைத் தானே கத்தியால் வயிற்றில் வெட்டி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருந்ததும் கைது செய்ய வந்த காவல் அதிகாரிகளால் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டதும் குறிக்க வேண்டிய முக்கிய விடயமாகின்றது.
அத்தோடு கடந்த 30.03.2021 நாடுகடத்துவதற்காக கைது செய்யப்பட்ட பல உறவுகளில் 4 உறவுகள் பல சட்ட நடவடிக்கைகள் மற்றும் அகதிகள் தொடர்பான அமைப்புக்களான “Flüchtlingsrat Baden – württemberg மற்றும் Seebrücke ” மற்றும் அரசியல் கட்சிகளான Baden – württemberg மாநிலத்தில் இயங்கக் கூடிய இடதுசாரிகள் கட்சி மற்றும் Bündnis Gürene Party ஆகியவற்றின் அழுத்தம் என்பவை அனைத்தும் இணைந்து எமது உறவுகள் நால்வரை ஜேர்மனிய விடுதலை செய்ய வைத்தது.
விடுதலைசெய்யப்பட்டவர்கள் வழமையான வாழ்வுக்குத் திரும்பி இருந்தார்கள். ஆனால் இப்போது அவர்களில் இருவரை மீண்டும் நாடுகடத்தும் செயற்பாட்டிற்காக காவல்துறை கைது செய்வதற்கு முயன்றிருப்பது வேதனையைத் தருகிறது. சட்டரீதியாக விடுதலை செய்யப்பட்ட ஒருவரை மீண்டும் அதே காரணத்தை காட்டி காவல் அதிகாரிகள் கைது செய்ய முயன்றிருப்பது பெரும் அபத்தமான செயற்பாடாகவே நாங்கள் கருதுகிறோம். இச்செயற்பாடானது பெரும் வேதனையை எமக்கு தருகின்றது.
1980 ஆம் ஆண்டுகளுக்கு முன்பான காலத்தில் இருந்து எமது உறவுகள் அரசியல் காரணங்களுக்காக உயிரை காப்பாற்றும் நோக்கோடு புலம்பெயர்ந்து வருவது நடைபெறுகின்ற ஒரு செயற்பாடு. அச்செயற்பாட்டை அனைத்துலகமும் அறிந்தே இருக்கின்றது. அதேநேரம், எம் மீதும் எம் தேசம் மீதும் இனவழிப்பு நடவடிக்கையை கட்டவிழ்த்து விட்டு 2009 இல் அதி உச்ச மனிதவுரிமை மீறல்களை செய்த அதே அரசு இன்றும் திட்டமிட்டு செய்து வரும் கைதுகளும் காணாமல் போகச் செய்வதும் முடிவுறவில்லை இதை ஏன் ஜேர்மனிய அரசு இன்னமும் புரிந்து கொள்ளவில்லை என்பது வேதனையாக இருக்கிறது.
கடந்த வாரம் நடந்த கைதுகள் இவற்றை எடுத்துக்காட்டாகின்றன.
மௌனிக்கப்பட்ட விடுதலைப் போராட்டத்தின் பின் தாமும் தம் குடும்ப வாழ்வும் என்று வாழ்ந்து வரும் போராளிகள் இப்போது திட்டமிட்டு கைது செய்யப்படுகிறார்கள். ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுவதோடு மட்டுமன்றி கைதுசெய்யவும் படுகிறார்கள். ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செய்திகளை சேகரிக்கவோ செய்திகளை மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கவோ முடியாத அளவுக்கு அச்சுறுத்தப்படுகிறார்கள். எமது தாயக பிரதேசம் எங்கும் வீதி வீதியாக இராணுவ பிரசன்னம் அதிகரித்து கிடக்கிறது. மக்கள் அடிக்கடி சுடப்படுகின்றார்கள் காயப்படுத்தப்படுகிறார்கள் சாகடிக்கப்படுகிறார்கள். இவை அனைத்தையும் விட இன்றும் எம் தாயகப் பிரதேசங்கள் அனைத்தும் தொல் பொருள் ஆராச்சி என்ற பெயரில் திட்டமிட்டு அபகரிக்கப்பட்டு சிங்கள மக்கள் குடியமர்த்தப்படுகின்றனர். இந்த நிலையில் தான் இன்றைய எம் தாயகம் இருக்கின்றது.
கொரோனா இடர்கால பணிகள் என்றாலும் சரி மக்களிடையே ஏற்படும் பிணக்குகள் என்றாலும் சரி இப்போது காவல்துறையை விட இராணுவமே அதற்குள் தலையிடும் கொடுமை நடந்தேறுகிறது.
புனர்வாழ்வு என்ற பெயரில் போராளிகளை தடுத்து வைத்து சித்திரவதைகளைச் செய்து சமூகத்தோடு இணைந்து வாழுங்கள் என்று விடுதலை செய்த இதே அரசு அவர்களை தனது புலனாய்வு வளையத்துக்குள் வைத்துக் கொண்டு தினமும் மிரட்டலும் பீதியடைய வைக்கும் கண்காணிப்பும் என்று கூற முடியாத துயரத்தில் வாழ வைக்கின்றது. எப்போதும் கைது செய்யப்படலாம் எப்போதும் காணாமல் ஆக்கப்படலாம் என்ற நிலையிலையே எம் மக்களையும் முன்னாள் போராளிகளையும் இந்த மகிந்த ஃ கோட்டபாய குடும்ப அரசு வைத்திருக்கிறது.
இதற்கு சான்று கடந்த மார்ச் மாதம் இரு ஊடகவியலாளர்கள் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டதும், கடந்த வாரம் மட்டக்களப்பை சேர்ந்த நாகலிங்கம் பிரதீபன் மற்றும் நாகர்கோவிலைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர், வள்ளிபுனத்தை சேர்ந்த நடனசபேசன் லோகராசா உட்பட 5 பேர் திட்டமிட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதும், இன்னமும் சிறீலங்காவில் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ முடியாமைக்கு சான்றாகின்றன. ஏதேதோ காரணங்களை முன்வைத்து முன்னாள் போராளிகளையும் மக்களையும் கைது செய்வதும் வலிந்து காணாமல் ஆக்குவதும் தொடரும் செயற்பாடுகளாகின்றது. கடந்த 02.06.2021 அன்று மட்டக்களப்பு இருதயபுரம் பகுதியில் வைத்து புலனாய்வுப்பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்திரன் விதுசன் என்ற இளைஞன் இன்று (03.06.2021) வெற்றுடலாக மீட்கப்பட்டிருப்பது இலங்கை அரசின் கொடூரத்தை ஜேர்மனிய அரசுக்கு புலப்படுத்தவில்லையா என்ற வினா எழுகின்றது.
எமது தாயகத்தில் இன்றும் தொடரும் மனிதவுரிமைகள் மீறல்களிலும் இனவழிப்பு நடவடிக்கைகளிலும் இருந்து தம்மைப் பாதுகாக்கவென்று புலம்பெயர்ந்து வந்து அகதி அந்தஸ்துக்கான கோரிக்கை வைத்திருக்கும் எம்மவர் மீதான நாடுகடத்தும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தி அவர்களுக்கான வாழ்வாதாரத்தை ஜேர்மனியில் நிலை நிறுத்த வேண்டும் என்றே நாம் விரும்புகின்றோம். இதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பாடுகளை முன்னெடுப்போம் ஜேர்மனிய அரசு எம் குரலுக்கு செவி சாய்த்து இந்த நடவடிக்கையை நிறுத்தும் என்று நம்புகிறோம்.