ஈழத் தமிழினமே என் இனத்தை அழித்தவனுக்கு ஆராத்தி எடுத்து வரலாற்றில் எம்மை ஈனத் தமிழினம் ஆக்கி விடாதே – அனுர – டில்வின் சில்வா – ஹரிணி
=================================
ஈழத் தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து விடக்கூடாது என்பதில் திடமாக இருந்த மக்கள் விடுதலை முன்னணி, தேசிய மக்கள் சக்தியினராக உங்கள் முன்னே கடை விரித்து நிற்கிறார்கள்.
என் அண்ணன் அக்கா தம்பி தங்கை என ஆயிரம் ஆயிரம் உயிர்கள் இந்த மண்ணிலே வித்தாகிப்போனது எனக்கும் உனக்குமான சுயநிர்ணய உரிமைக்காகவே. தங்களுக்கென்று ஒரு வீடு கூட இல்லாதவர்கள் இந்த இனத்திற்காக ஒரு நாட்டினை உருவாக்குவதற்காகத் தானே தங்கள் உயிர்களை தியாகம் செய்திருக்கிறார்கள். அவர்கள் தமக்காக வீடு கட்ட புறப்பட்டவர்கள் அல்ல. தம் இனத்திற்காக நாடுகட்ட புறப்பட்டவர்கள்.
மாற்றானுக்கு மாலையிட்டு மங்களித்த உறவுகளே, இந்த மண் ஏன் இன்னும் சிவப்பாய் இருக்கிறது என என்றேனும் நீங்கள் ஆராய்ந்து பார்த்ததுண்டா?. என்னப்பன், அவனப்பன், அவனப்பன் அப்பன் என என் உறவில் பாட்டனாயும், பூட்டனாயும், கொப்பாட்டனாயும், முப்பாட்டனாயும் நீண்டு தலைமுறை தலைமுறையாய் தழைத்து நின்றவர்கள் மாடாய் உழைத்து மப்பாக்கிய இந்த மண்ணிலே தான்; என் அப்பனும் ஆத்தாளும் சிறுநீர் கழித்து சிலிர்த்திருந்த இம் மண்ணிலேதான்; என் அண்ணன்மார்களும் அக்காக்களும் இன்னும் தம்பி தங்கைகள் என ஒரு சந்ததியே பட்டாசு கொளுத்தும் வயதில் பட்டாசாய் சிதறிப்போய் என் தேசத்தை இன்னும் சிவப்பாக்கி போனார்கள்.
என் தலைவன் நடத்திய போரின் வலிமையே ஜே. ஆர்.ஐயும், பிரேமதாசாவையும், சந்திரிகாவையும், ரணிலையும், மஹிந்தவையும் பேச்சுவார்த்தை மேசைக்கு வலிந்து இழுத்து வந்து பேச வைத்தது. ஆனாலும் தமிழர்களுக்கு எந்தவொரு உரிமையும் கிடைத்து விடக்கூடாது என்பதற்காக அப் பேச்சுவார்த்தைகளை குழப்புவதில் மிகத் தீவிரமாக நின்றவர் குப்பத்தில் பிறந்தவராய் நீங்கள் காவித்திரியும் இந்த அனுரவும் அவரது மக்கள் விடுதலை முன்னணியுமே.
(1) சுயநிர்ணய உரிமையே (1986) தமிழர்களுக்கு கிடையாது என்றார்கள் (2) தமிழர்களுக்கு ஏதாவது கிடைத்துவிடும் என்பதற்காகவே 13ஆம் திருத்தச் சட்டத்தை(1987) முழுமையாக நிராகரித்தார்கள்.(3) சுனாமியின் போது (2004) விடுதலைப்புலிகள் தென்பகுதிக்கு நிவாரணங்களை கொடுத்திருந்தும் தமிழர்களுக்கு நிவாரணம் கிடைத்து விடக்கூடாது என்பதற்காகவே சுனாமி கட்டமைப்பை நிராகரித்தார்கள் (4) தமிழர்களுக்கு எதிராக போரை நடத்த வேண்டும் என்பதற்காகவே மகிந்தவை ஜனாதிபதியாக (2005) தெரிந்து எடுத்தார்கள்.(5) வழக்கு தாக்கல் (2006) செய்து வடகிழக்கு தமிழர் தாயகத்தை பிரித்தார்கள் (6) மேலும் ஒரு வழக்கில் மாகாணங்களுக்கு காணி அதிகாரங்கள் இல்லை என்று சொன்னார்கள். இன்னும் எத்தனையோ எத்தனையோ ஆதாரங்கள் வரலாற்றில் விரவிக் கிடக்கின்றன.
2024 ஏப்ரல் மாதம் இரத்தினபுரியில் ஓய்வு பெற்ற ராணுவத்தினரோடு நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அமைச்சர் லால் காந்த ‘யுத்தத்தில் ராணுவம் உயிர்த்தியாகம் செய்ததாகவும், அதற்கான மனோபலத்தையும் அரசியல் பலத்தையும் கொடுத்தது மக்கள் விடுதலை முன்னணியே’ என தெரிவித்திருந்தார்.
13-வது திருத்தச் சட்டத்தின் மூலம் தமிழர்களுக்கு ஏதாவது கிடைத்து விடும் என நம்ப வைக்கும் தமிழ்த் தேசியவாதிகளுக்கும் நாட்டின் ஜனாதிபதி அனுத குமார திசாநாயக்கவே ஒரு தெளிவான செய்தியை வழங்கி இருந்தார். ’13 ஆவது திருத்தச் சட்டம் அதன் உடல் பூராகவும் விஷம் நிறைந்த ஒன்று. அதன் பல்லைப் பிடுங்கியோ காதை நறுக்கியோ வாலை வெட்டியோ பிரயோசனமில்லை. அதனை முழுவதுமாக அழிக்க வேண்டும்’ (கீழே வீடியோ இணைக்கப்பட்டுள்ளது) என்பதே அனுரவின் நிலைப்பாடு.
தமிழர்கள் அதிகாரங்கள் எதனையும் கேட்கவில்லை என்று சொல்கிறார் டில்வின் சில்வா.(கீழே வீடியோ இணைக்கப்பட்டுள்ளது)
அக்காமாரே! என் அண்ணனை அக்காவை தம்பியை தங்கையை புதைத்து சிவந்த நிலத்தில் நின்று எப்படித்தான் எதிரிக்கு ஆராத்தி எடுத்து சிவப்பு பொட்டு வைக்கிறீர்கள்? சிவப்புப் பொட்டை எதிரியின் நெற்றியில் இடும் போது ஏன் தானோ இரத்தத்தில் திலகமிட்டு போர்க்களம் அனுப்பிய எங்கள் அண்ணன்மார்கள் உங்கள் நினைவில் வரவில்லை? பொட்டு வைத்த உங்கள் விரல் நுனிகளை மறுபடி ஒரு தரம் பாருங்கள். இப்போது உங்கள் அண்ணன்மார் களத்திலே சிந்திய குருதியில் சிவப்பாய் தெரியும் உங்கள் விரல் நுனிகள்.
குப்பத்தில் பிறந்தவன் என்பதற்காய் அனுர என் அண்ணனாகிவிட முடியாது. குப்பத்தில் பிறந்தாலும் என் அண்ணன் எனக்கு குண்டுமணி தான். என் அண்ணனனின் இலட்சியத்தை யாருக்கும் தாரை வார்த்த விடவும் முடியாது. சாயம் வெளுக்கு காலம் வெகுதொலைவில் இல்லை. அப்போது ஈழத் தமிழினத்திற்கு பதில் சொல்ல வேண்டியவர்களாக நீங்கள் இருப்பீர்கள்.
-சட்டவாளர்.நடராஜர் காண்டீபன்:-