பெறுநர்,
உயர்திரு சௌ. டேவிட்சன் தேவாசீர்வாதம் அவர்கள்,
இ.கா.ப., காவல்துறை
கூடுதல் இயக்குநர்,
உளவுத்துறை.
மைலாப்பூர்,
சென்னை-4
பெரும் மரியாதைக்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம்.
2009 மே மாதம் இலங்கையிலுள்ள தமிழீழ மண்ணில் நடந்த திட்டமிட்ட இனப்படுகொலைக்கு முன்பும் பின்பும், இந்திய ஒன்றியம் தங்களது தந்தையர் நாடு என்ற பேரன்போடும், பெரும் நம்பிக்கையோடும் தாய்த்தமிழ்நாட்டிற்கு ஓடி வந்தவர்கள் ஈழத்தமிழர்கள். அவர்களுக்கு, பிற நாடுகளில் ஏதிலிகளுக்கு கிடைக்கப்பெறும் வசதிகளைப் போலல்லாமல், உரிமை குறைந்த, ஒரு நிம்மதியற்ற வாழ்வியல் சூழலே இங்குள்ள ஏதிலி முகாம்களில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது நாம் அனைவரும் அறிந்ததே. அதிலும் அவர்கள் சில சிறிய தவறுகள் செய்துவிட்டு திருச்சி சிறப்பு முகாமில் அடைபட்டு அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய தண்டனைக் காலத்திற்கும் மேலாகவும் பல மடங்கு கூடுதலாகவும் சிறைப்பட்டுக் கிடக்கிறார்கள். தாங்கள் தமிழ்நாடு உளவுப்பிரிவின் காவல்துறைக் கூடுதல் இயக்குநராக பதவியேற்றதிற்கு பின்பு, ஏற்கனவே அங்கு அடைக்கப்பட்டிருந்த 78 ஈழத்தமிழர்களில் 10 பேரை விடுதலை செய்த நிகழ்வு, உலகம் முழுக்க வாழ்கின்ற தமிழர்களின் மனங்களில் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதற்காக அனைத்து தமிழர்களின் சார்பாக, தமிழ்நாடு அரசிற்கும் தங்களுக்கும் எங்களது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
2016-ஆம் ஆண்டு நான்கு தமிழீழத் தமிழர்களை விடுதலை செய்ததற்கு பின்பு, தற்போதைய இந்த 10 பேர் விடுதலை என்பது நெகிழ்விற்குரிய ஒரு நிகழ்வு. தவறு செய்தவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி, பின்பு வழக்குகள் முடிந்து அவர்களை விடுதலை செய்வது என்பது சரியானது தான். ஆயினும் கடவுச்சீட்டு சம்பந்தப்பட்ட வழக்கில், ஆறு மாதங்கள் மட்டுமே தண்டனை அனுபவிக்க வேண்டிய ஏறத்தாழ 48 ஈழத்தமிழர்கள் ஓர் ஆண்டு முதல் ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையிலும் தண்டனை அனுபவித்துக் கொண்டிருப்பது என்பது மிகவும் கவலைக்குரிய ஒரு விடயமாகும்.
2016-ஆம் ஆண்டு கடவுச்சீட்டு சம்பந்தப்பட்ட வழக்கில், அந்த நபர்களைச் சட்டப்படி அப்போது எப்படி விடுவித்தார்களோ அதே வழியினைப் பின்பற்றி அதே வழக்கில் இருக்கும் 48 ஈழத்தமிழர்களையும் கருணையுள்ளம் கொண்டு, தாங்கள் அரசுடன் கலந்து பேசி விடுதலை செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், கு.பாஸ்கரன் மற்றும் ஆனந்தராஜா என்கிற இருவரை மட்டும் இலங்கை அதிகார வர்க்கம் இந்திய ஒன்றியத்திற்கு கடுமையான நெருக்கடி கொடுத்துத் தங்கள் நாட்டிற்கு அவர்களை அனுப்பும்படி வேண்டுகோள் வைத்திருப்பது பெரும் அதிர்ச்சிக்குரிய ஒரு செய்தி. இன அழிப்பின் வழக்கும், விவாதமும் ஐ.நா., மன்றத்தில் இப்பொழுதும் நடந்து கொண்டிருக்கும் நிலையில், இனப்படுகொலை செய்த அதே அரசு இலங்கையில் தொடர்ந்து கொண்டிருக்கிற சூழலில், அவர்கள் வலிந்து கேட்கிற இந்த இரண்டு நபர்களையும் அனுப்பிவைத்தால் கண்டிப்பாக அவர்கள் படுகொலை செய்யப்படுவார்கள் என்பது யதார்த்தத்தின் பேருண்மை. ஆகையினால் கு.பாஸ்கரன் மற்றும் ஆனந்தராஜா என்கிற இருவரும் இலங்கைக்கு செல்ல விரும்பாத நிலையில் அவர்களை ஒருபோதும் கட்டாயப்படுத்தி அங்கு அனுப்பக்கூடாது என்று உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.
நடந்து முடிந்த இனப்படுகொலைக்கு இன்னும் தீர்வு வராத நிலையில் மீண்டும் கோரப் பசியுடன் திரிந்து கொண்டிருக்கும் இராஜபக்சேவின் அதிகாரவர்க்கம் இவர்களை என்ன வேண்டுமானாலும் செய்யும் என்பது உலகம் அறிந்ததே. தாய்மையுள்ளம் கொண்டு அவர்கள் இருவரையும், காந்தி தேசம், புத்தன் தேசம் என்று சொல்கின்ற இந்திய ஒன்றிய அதிகாரவர்க்கமும்,
தாய்த்தமிழ்நாடும் அவர்களை விடுதலை செய்து கவனத்துடன் பாதுகாக்க வேண்டும் என்றும்,
தண்டனைக் காலம் முடிந்த 48 ஈழத்தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்து ஏதிலியர் முகாம்களிலுள்ள அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்து, மீதமுள்ள காலத்தில் அவர்கள் அழகானதொரு வாழ்க்கையை வாழும் சூழலை உருவாக்கித் தரும்படி மீண்டும் எனது அன்பான வேண்டுகோளை வைக்கிறேன்.
நன்றிகள்.
வ.கெளதமன்.