உக்ரைன் ரஷ்யா போரின் தற்போதைய மையப்பகுதியாக திகழும் செவரோடோனெட்ஸ்க் நகரத்தை பிற உக்ரைனிய நகரங்களுடன் இணைக்கும் மூன்று பாலங்களையும் ரஷ்ய படையினர் தகர்த்தெறிந்து விட்டதாக பிராந்திய ஆளுநர் செர்ஹி ஹைடாய் தெரிவித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா போரானது தற்போது தெற்குப் பகுதி நகரான செவரோடோனெட்ஸ்க்கில் உச்சக்கட்டத்தை தொட்டு இருக்கும் நிலையில், ரஷ்ய ராணுவம் நகரை முழுவதுமாக கைப்பற்றவில்லை என்றாலும், பிராந்தியத்தின் மையப்பகுதியை உக்ரைனின் பிற பகுதிகளுடன் இணைக்கும் மூன்று பாலங்களை ரஷ்ய ராணுவம் இப்போது அழித்துள்ளது.
இதுத் தொடர்பாக அந்த பிராந்தியத்தின் அளுநர் செர்ஹி ஹைடாய் தெரிவித்துள்ள கருத்தில், நகரின் மூன்று பாலங்களையும் அழித்து இருப்பதன் மூலம், பொதுமக்களின் வெளியேற்றத்தையும், அத்தியாவசிய பொருள்கள் நகரின் உள்ளே கொண்டு செல்வதையும் ரஷ்ய ராணுவம் சாத்தியமற்றதாக்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.
அத்துடன் நகரம் கடுமையான தீயில் உள்ளது, நகரத்தில் தங்கியிருக்கும் குடியிருப்பாளர்கள் மிகவும் கடினமான சூழ்நிலையில் உயிர் பிழைக்கின்றனர் எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, ரஷ்ய ஆதரவு பிரிவினைவாத தலைவர் ஒருவர் தெரிவித்த கருத்தில், நகரத்தில் உள்ள உக்ரைனிய துருப்புகள் சரணடைய வேண்டும் அல்லது இறக்க வேண்டும், ஏனெனில் அவர்களுக்கு வேறு வழியில்லை என தெரிவித்துள்ளார்.