உக்ரைனின் இரத்த மாற்று மையத்தின் மீது ரஷ்யா வான்வழி குண்டு தாக்குதல் நடத்தி அழித்து இருப்பதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது. உக்ரைனின் கிழக்கு கார்கிவ் பகுதியின் குபியன்ஸ்க் நகரில் உள்ள இரத்த மாற்று மையத்தின் மீது ரஷ்யா வான்வழி குண்டு தாக்குதல் நடத்தி இருப்பதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் இந்த திடீர் தாக்குதலில் பலர் இறந்து இருப்பதாகவும், பலர் படுகாயமடைந்து இருப்பதாகவும் குறிப்பிட்ட ஜெலென்ஸ்கி தன்னுடைய இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ரஷ்ய தாக்குதலால் இரத்த மாற்று மையத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க தங்களது மீட்பு படையினர் போராடி வருகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனித்த இந்த போர் குற்றம் ரஷ்யாவின் அராஜகங்கள் குறித்து தெரிவிக்கிறது. தான் வாழ்வதற்காக மட்டும் இந்த கொடிய மிருகம் அனைத்தையும் அழிக்கிறது.
உயிர்களை மதிக்கும் அனைவரும் பயங்கரவாதிகளை தோற்கடிப்பது மரியாதைக்குரிய விஷயம் என்றும் தெரிவித்துள்ளார்.
இரத்த மாற்று மையத்தின் மீது ரஷ்யா நடத்திய வான் தாக்குதலில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் மற்றும் படுகாயமடைந்தனர் என்பது குறித்த தெளிவான எண்ணிக்கை தெரியவரவில்லை.
உக்ரைன் ரஷ்யா இடையிலான இந்த மோதலுக்கு மத்தியில் சவுதி அரேபியாவில் உக்ரைன் போர் நிறுத்தம் குறித்த அமைதி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது, இதில் கிட்டத்தட்ட சீனா, அமெரிக்கா, இந்தியா போன்ற 40 நாடுகளின் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.