கருங்கடலில் இருந்து தானிய ஏற்றுமதியை முன்னெடுப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தான சில மணி நேரங்களில், ரஷ்யா தெற்கு உக்ரைனில் உள்ள முக்கிய துறைமுகமான ஒடேசா மீது ஏவுகணைகளை வீசி தாக்கியுள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரை நாடுகள் கையெழுத்திட்ட குறித்த தானிய ஏற்றுமதி ஒப்பந்தமனது சர்வதேச உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வைக் கட்டுக்குள் வைப்பதில் முக்கியமானது என நம்பப்படுகிறது.
குறித்த ஒப்பந்தம் காரணமாக ஒடேசா உட்பட கருங்கடல் பகுதி துறைமுகங்களில் இருந்து தானியங்கள் வெளியேறும்.
அடுத்த சில வாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்த குறித்த ஒப்பந்தமானது செயல்பாட்டுக்கு வரும் என்று நம்புவதாக ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் கூறியுள்ளனர், ஆனால் இன்றைய ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு அது சாத்தியமாகுமா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, இரண்டு ஏவுகணைகள் துறைமுகத்தைத் தாக்கியது, மற்ற இரண்டு ஏவுகணைகள் வான் பாதுகாப்புப் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டன என்று உக்ரைன் இராணுவத் தளபதிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைனுக்கான அமெரிக்க தூதர் பிரிட்ஜெட் பிரிங்க் தெரிவிக்கையில், இந்த தாக்குதல் சம்பவம் மூர்க்கத்தனமானது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், உணவை ஆயுதமாக்கும் செயலை ரஷ்யா தொடர்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பிப்ரவரி 24ல் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு பின்னர் கருங்கடல் பகுதியில் கப்பல்களை குவித்துள்ளதுடன், உக்ரைன் தானிய ஏற்றுமதிக்கு சிக்கலையும் ஏற்படுத்தி வருகிறது. இதனால் சுமார் 10 பில்லியன் டொலர் பெருமதியான தானியங்கள் தேங்கிப்போயுள்ளன.