உக்ரைனின் புச்சா நகரில் நிகழ்ந்த படுகொலைகளுக்கு ஐ.நாவில் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 41-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இதனால், அங்கிருந்து லட்சக்கணக்கானோர் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். ரஷ்யா மீது பல நாடுகள் பொருளாதார தடைகள் விதித்தாலும், பின்வாங்காமல், தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. நடைபெற்று வரும் போரால் இருநாடுகளும் தங்கள்து ராணுவ வீரர்களை இழந்துள்ளனர். அத்துடன் உக்ரைனில் பொதுமக்களின் குடியிருப்புகள், பல பொதுச் சொத்துக்கள், உலகின் மிகப்பெரிய விமானமான Antonov-225 உள்ளிட்டவை சேதமடைந்துள்ளன.
இதற்கிடையே, உக்ரைனின் புச்சா நகரில் உள்ள ஒரு புதைகுழியில் 300-க்கும் மேற்பட்டோர் புதைக்கப்பட்டதாகவும், அந்த நகரம் முழுவதும் சடலங்கள் சிதறிக் கிடப்பதாகவும் அந்நகர மேயர் தெரிவித்திருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி நெஞ்சை உலுக்குவதாக அமைந்திருந்தது.
இது தொடர்பாக ஜ.நா.வில் பேசிய இந்திய தூதர் திருமூர்த்தி, உக்ரைனில் பொதுமக்கள் மீதான தாக்குதல் கவலையளிப்பதாகவும், புச்சா நகரில் நிகழ்ந்த படுகொலைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவிப்பதாக கூறினார். மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனுக்கு மருத்துவ உதவிகள் வழங்க இந்தியா தயாராக இருப்பதாகவும், புச்சா படுகொலை தொடர்பான விசாரணைக்கும் இந்தியா ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.