ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொண்டுள்ள கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, உக்ரைனுக்கு ஆதரவாக கனடா நிற்கும் என தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் உலக தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதில் கலந்துகொண்ட கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ‘ரஷ்யாவின் மிருகத்தனமான போர் உக்ரைனில் உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடிகளை உருவாக்குகிறது.
இது விநியோக சங்கிலிகளை சீர்குலைக்கிறது மற்றும் வாழ்வுக்கான செலவை உயர்த்துகிறது’ என வணிகத் தலைவர்களிடம் தனது உரையின்போது கூறினார்.
அதனைத் தொடர்ந்து ட்ரூடோ தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஜி20 தலைவர்கள் உச்சி மாநாட்டின் ஒரு நாள் இது. அடுத்த இரண்டு நாட்களில், உக்ரைனுக்கு ஆதரவாக கனடா நிற்கும், கூட்டாண்மையை விரிவுபடுத்துவதன் மூலம் நமது பொருளாதாரத்தை உயர்த்த முடியும் மற்றும் கனேடியர்கள் சவால்களையும் எதிர்கொள்ள முடியும். இன்னும் நிறைய வர விருக்கின்றன’ என பதிவிட்டுள்ளார்.
ரஷ்யா மீதான கனடாவின் நிலைப்பாடு சில ஜி20 நாடுகளுடன் முரண்படுகிறது. சமீபத்திய மாதங்களில் ரஷ்யாவைக் கண்டிக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களில் இருந்து சீனா, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் விலகின என்பது குறிப்பிடத்தக்கது.