போரில் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்கள் வழங்குவதை எதிர்த்து ஜேர்மனிய தலைநகர் பெர்லினில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜேர்மனி, அமெரிக்காவுடன் சேர்ந்து உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாக இருந்து வருகிறது.
இந்நிலையில், ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்கள் வழங்குவதை எதிர்த்து ஜேர்மனிய தலைநகர் பெர்லினில் கிட்டத்தட்ட 10,000 மக்கள் சனிக்கிழமையன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வைத்திருந்த பலகையில், “பேச்சுவார்தை நடத்துங்கள், மோதலை அதிகரிக்க வேண்டாம், நம்முடைய போர் அல்ல” என்பது போன்ற வாசகங்கள் காணப்பட்டன.
ஜேர்மனியின் இடதுசாரி டை லிங்கே கட்சியின் உறுப்பினரான சஹ்ரா வேகன்க்னெக்ட்டால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உக்ரைனுக்கான ஆயுத விநியோக அதிகரிப்பதை நிறுத்துமாறு ஜேர்மன் அதிபரை நாங்கள் அழைக்கிறோம் என போராட்டத்தில் கலந்து கொண்ட ஜேர்மனியின் இடதுசாரி கட்சி உறுப்பினர்கள் கோரிக்கையை முன்வைத்தனர்.
அத்துடன் தற்போது இந்த போரில் ஒவ்வொரு நாளும் 1,000க்கும் அதிகமான உயிர்கள் இழக்கிறது, இவை நம்மை 3ம் உலகப் போருக்கு எடுத்து செல்லுகிறது என்றும் போராட்ட ஏற்பாட்டாளர்கள் தங்கள் இணையதளத்தில் தெரிவித்தனர்.
இதற்கிடையில் தலைநகரில் அமைதியை காக்கவும், ரஷ்ய மற்றும் சோவியத் கொடிகள், ரஷ்ய ராணுவ பாடல்கள் ஆகியவை மீதான தடையை அமல்படுத்த 1,400 பொலிஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தில் குவிக்கப்பட்டனர்.