உக்ரைனின் தெற்கு கடற்கரையில் இருந்து கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளுக்கு பிரித்தானியா உதவ தயாராக இருப்பதாக பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். மட்டுமின்றி, உக்ரைனில் தேங்கியுள்ள மில்லியன் கணக்கான டன் தானியங்களை கொண்டு செல்ல கப்பல்களுக்கு காப்பீடு வழங்குவது குறித்தும் பரிசீலித்து வருவதாக போரிஸ் ஜோன்சன் உறுதி அளித்துள்ளார்.
பிரித்தானிய பிரதமரின் இந்த அறிக்கையானது தற்போது இந்த விவகாரத்தில் முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு பின்னர் கருங்கடல் பகுதி துறைமுகங்களில் இருந்து தானிய ஏற்றுமதியானது முற்றாக முடங்கியது.
உலகின் முதன்மை தானிய உற்பத்தியாளர்களில் ஒருவரான உக்ரைனில் தற்போது 20 மில்லியன் டன் தானியங்கள் தேங்கியுள்ளது. இதனால் உணவுப் பொருட்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்ததுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் சாப்பிட உணவின்றி சிரமத்திற்கு உள்ளாகினர்.
மட்டுமின்றி, இந்த நெருக்கடி இரண்டு ஆண்டுகள் வரையில் நீடிக்கும் என்று மேற்கத்திய நிபுணர்கள் தரப்பு கூறி வருகின்றனர். இதனிடையே, இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர துருக்கியும் ஐக்கிய நடுகள் மன்றமும் ஒன்றிணைந்து நான்குவழி பேச்சுவார்த்தையை முன்னெடுக்க முயற்சி மேற்கொண்டுவருகிறது.
ஆனால், மேற்கத்திய நாடுகள் குறிப்பிட்ட தடைகளை விலக்கினால் மட்டுமே இந்த விவகாரத்தில் ரஷ்யா உதவ முடியும் என கூறி வருகிறது. இந்த நிலையில், துருக்கி மற்றும் ஐரோப்பிய நட்பு நாடுகளுடன் இந்த விவகாரம் தொடர்பில் பேசி வருவதாகவும், தங்களால் என்ன உதவி செய்ய முடியும் என்பதை விவாதித்து வருவதாகவும் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
கப்பல்களுக்கு காப்பீடு அளிக்கவும், தானியங்களை பாதுகாப்பாக வெளியேற்றவும் பிரித்தானியாவால் திறம்பட செய்ய முடியும் என நம்புவதாக போரிஸ் ஜோன்சன் சுட்டிக்காட்டியுள்ளார்.
கண்ணிவெடிகள் அகற்றுவது தொடர்பில் தங்களால் உதவ முடியும் என குறிப்பிட்டுள்ள ஜோன்சன், தொழில்நுட்ப ரீதியாக உக்ரைன் துருப்புகளை தங்களால் தயார் செய்ய முடியும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதனிடையே, உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும் பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம், உக்ரைனிலிருந்து தானிய ஏற்றுமதியைத் தடுப்பதன் மூலம் ரஷ்யா உலகளாவிய உணவு நெருக்கடியைத் தூண்டுவதாக குற்றம் சாட்டின.
மேலும், மில்லியன் கணக்கான டன் உக்ரேனிய தானியங்களை ஏற்றுமதி செய்வதைத் தடுப்பதன் மூலம் ரஷ்யா போர்க்குற்றத்தில் ஈடுபட்டு வருவதாக இந்த வார தொடக்கத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.