ரஷியா-உக்ரைன் இடையிலான போர் 2 ஆண்டுகளை கடந்த பிறகும் தொடர்ந்து நடந்து வருகிறது. நேட்டோ உறுப்பு நாடுகளான அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்குத் தேவையான ராணுவ மற்றும் நிதியுதவிகளை வாரி வழங்கி வருகின்றன.
இந்நிலையில் ஆஸ்திரேலிய பாதுகாப்புத்துறை மந்திரி ரிச்சர்டு மார்லெஸ் உக்ரைன் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். உக்ரைனின் லிவிவ் நகருக்குச் சென்ற அவர், உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷமிஹாலை சந்தித்துப் பேசினார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ரிச்சர்டு மார்லெஸ், ஆஸ்திரேலிய அரசு சார்பில் உக்ரைனுக்கு குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்பு, டிரோன், வெடிமருந்து உள்பட மொத்தம் 100 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவித் தொகுப்பு வழங்கப்படும். உக்ரைனுடன் ஆஸ்திரேலியா உறுதியாக துணைநிற்கும் என தெரிவித்தார்.