உக்ரைனில் ரஷ்யா முன்னெடுத்து வரும் சிறப்பு ராணுவ தாக்குதலின் வெற்றியை துரிதப்படுத்தும் முயற்சியில் அதற்கான புதிய தளபதியை ரஷ்ய ஜனாதிபதி புடின் நியமித்துள்ளார். உக்ரைனில் ரஷ்யா 45வது நாளாக தாக்குதலை நடத்திவரும் நிலையில், ரஷ்யா ஆயிரக்கணக்கான ரஷ்ய ராணுவ வீரர்களை இழந்ததுடன், இதுவரை எந்தவொரு குறிப்பிடத்தக்க வெற்றியையும் ரஷ்யா பெறவில்லை.
மேலும் உக்ரைனின் தலைநகர் கீவ் மற்றும் துறைமுக நகரம் மரியுபோல் ஆகிய நகரங்களில் இருந்து படைகளை பின்னகர்த்தி தற்போது உக்ரைனின் கிழக்கு எல்லைப் பகுதிகளில் கவனம் செலுத்தி வருகிறது.
இந்தநிலையில், அடுத்தமாதம்(மே) 9ம் திகதி நடைபெறவுள்ள இரண்டாம் உலகப்போரில் நாஜிகளுக்கு எதிரான வெற்றியை கொண்டாடும் வெற்றிவிழாவிற்குள், உக்ரைனின் கிழக்கு எல்லைப் பகுதியான டான்பாஸை மட்டுமாவது கைப்பற்றிவிட வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி புடின் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறார்.
அந்தவகையில் தற்போது உக்ரைனில் மேற்கொண்டு வரும் ரஷ்யாவின் சிறப்பு ராணுவ தாக்குதலை தலைமை தாங்குவதற்காக ரஷ்யாவின் தளபதியான ஜெனரல் அலெக்சாண்டர் டிவோர்னிகோவ்-வை புதிதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் நியமித்துள்ளார்.
இவர் சிரியாவில் ரஷ்யா நடத்திய ராணுவ முன்னெடுப்புகளை தலைமை தாங்கி நடத்தியவர் என பேர் வெளியிட விரும்பாத மேற்கத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.