ரஷ்யாவின் பீரங்கி தாக்குதலில் பிரித்தானிய ராணுவ வீரர் உக்ரைனில் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் சிறப்புப் படையில் பணியாற்றியவர் சைமன் லிங்கார்ட். ஆப்கானிஸ்தானில் பிரித்தானிய ராணுவத்திற்காக பல சுற்றுப்பயணங்களைச் செய்த இவர், உக்ரைனுக்கு உதவுவதற்காக அந்நாட்டு ராணுவத்துடன் இணைந்ததாக கூறப்படுகிறது.
உக்ரேனிய துருப்புகளுடன் இணைந்து பல மாதங்களாக ரஷ்ய படைக்கு எதிராக லிங்கார்ட் சண்டையிட்டதாக நம்பப்படுகிறது. உக்ரைனின் கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள பாக்முட் நகரத்தை பாதுகாக்கும் பிரித்தானிய தன்னார்வலர்கள் குழுவின் ஒரு பகுதியாக சைமன் லிங்கார்ட் இருந்துள்ளார்.
இந்த நிலையில், ரஷ்ய ராணுவத்தின் தாக்குதலில் சைமன் லிங்கார்ட் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது மகன் ஜாக்சன் தனது பேஸ்புக் பக்கத்தில், உக்ரைனில் ரஷ்ய ராணுவத்தினர் தாக்கியதால் தனது தந்தை இறந்ததாக எழுதியுள்ளார்.
மேலும், அவர் நம்மில் பலருக்கு பிரியமானவர் என்றும், ஒரு உண்மையான ஹீரோ என்றும் குறிப்பிட்டுள்ளார். லிங்கார்ட் தங்கியிருந்த அகழியில் ரஷ்ய பீரங்கி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. உக்ரைனில் போரிடும் போது உயிரிழந்த மூன்றாவது பிரித்தானியர் சைமன் லிங்கார்ட் என்று நம்பப்படுகிறது.