துருக்கிய போர் விமானங்களை ஏஜியன் கடற்பகுதியில் தொடர்ந்து சீண்டினால், கிரீஸ் கடும் விலையை கொடுக்க நேரிடும் என அந்நாட்டு ஜனாதிபதி தயிப் எர்டோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதே நிலை நீடிக்கும் என்றால் இராணுவ நடவடிக்கைகளுக்கும் துருக்கி தயங்காது என அவர் குறிப்பிட்டுள்ளார். உக்ரைன் மீது படையெடுத்து கடும் பாதிப்புகளை ரஷ்யா ஏற்படுத்தி வரும் நிலையில், தைவானை குறிவைத்து சீனாவும் போருக்கான ஒத்திகைகளை முன்னெடுத்து வருகிறது.
இந்த நிலையில் கிரீஸ் மீது கடும் விமர்சனங்களை துருக்கி ஜனாதிபதி முன்வைத்துள்ளதுடன், இராணுவ நடவடிக்கை தொடர்பிலும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இரு நேட்டோ அண்டை நாடுகளுக்கும் நீண்ட காலமாக கடல் மற்றும் வான் எல்லை தகராறுகள் உள்ளன, இதனால் இரு நாடுகளும் தினசரி விமானப்படை ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
ஆனால், பெரும்பாலும் துருக்கி கடற்கரைக்கு அருகிலுள்ள கிரேக்க தீவுகளைச் சுற்றி இரு நாட்டு விமானப்படை விமானங்களும் இடைமறிப்பு நடவடிக்கைகளை வாடிக்கையாக முன்னெடுத்து வருகிறது.
இந்த நிலையில், சனிக்கிழமையன்று கருங்கடல் நகரமான சாம்சுனில் திரண்ட பேரணியில் எர்டோகன் பேசுகையில், கிரேக்க நாடே, வரலாற்றை கொஞ்சம் கவனித்துப் பார், இதே நிலை நீடிக்கும் என்றால், உண்மையில் கடும் விலையை கொடுக்க நேரிடும் என்றார் அவர்.
வரலாற்று காலம் தொட்டே எதிரிகளான துருக்கியும் கிரீஸும் விமானங்களால் அத்துமீறுவது மற்றும் ஏஜியன் தீவுகளின் நிலைப்பாடு முதல் கடல் எல்லைகள் மற்றும் மத்தியதரைக் கடலில் உள்ள ஹைட்ரோகார்பன் வளங்கள் மற்றும் சைப்ரஸின் 1974 பிரிவு ஆகியவற்றில் உள்ள சிக்கல்களில் தொடர்ந்து முரண்பட்டு வந்துள்ளன.
கிரீஸ் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது என்று துருக்கி சமீபத்திய மாதங்களில் புகார் கூறியுள்ளது, மட்டுமின்றி இது போன்ற நடவடிக்கைகள் இரு நாடுகளுக்கும் இடையேயான அமைதி முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகக் கூறியது.
கடந்த வார இறுதியில், ரஷ்யாவில் தயாரான வான் பாதுகாப்பு அமைப்பை பயன்படுத்தி துருக்கிய விமானப்படையை சீண்டியதாக கிரீஸ் மீது குற்றஞ்சாட்டியுள்ளது. ரஷ்ய தயாரிப்பான S-300 ஏவுகணை அமைப்பை பயன்படுத்தி தங்களை கிரீஸ் மிரட்டுவதாக எர்டோகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆனால் துருக்கியின் மொத்த குற்றச்சாட்டுகளையும் நிராகரித்துள்ள கிரீஸ், கிரேக்க தீவுகளின் மீது துருக்கியே அத்துமீறுவதாக புகார் அளித்துள்ளது. ஏஜியன் கடற்பகுதியானது 2,000 க்கும் மேற்பட்ட தீவுகளுடன் சிக்கலான புவியியலைக் கொண்டுள்ளது,
அவற்றில் பெரும்பாலானவை கிரேக்க நாட்டின் கீழ் உள்ளது. இந்த நிலையில், ஏஜியன் கடற்பகுதியை கிரீஸ் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து வருவதாக துருக்கி குற்றஞ்சாட்டி வருகிறது