உக்ரைன் விவகாரத்தில் நேரடி தலையீடு! நோர்வே மற்றும் மேற்குலகத்தை எச்சரிக்கும் ரஷ்யா!!

You are currently viewing உக்ரைன் விவகாரத்தில் நேரடி தலையீடு! நோர்வே மற்றும் மேற்குலகத்தை எச்சரிக்கும் ரஷ்யா!!

உக்ரைனுக்கு கனரக ஆயுதங்களையும், கவச வாகனங்களையும் வழங்குவதன் மூலம், உக்ரைன் விவகாரத்தில் நோர்வேயும், மேற்குலகமும் நேரடியான தலையீட்டை செய்வதாகவே கருத முடியுமென ரஷ்ய அதிபர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்கா, நோர்வே, ஜெர்மனி, போலந்து, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள், சக்தி வாய்ந்த கவச வாகனங்களை உக்ரைனுக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளதையடுத்து நோர்வேயும் கவச வாகனங்களை உக்ரைனுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலதிகமாக பல பில்லியன் டொலர்கள் பெறுமதி வாய்ந்த கனரக ஆயுதங்களையும் வழங்கவிருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்ட போதே ரஷ்ய அதிபர் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் உக்ரைன் தன்னை பாதுகாத்துக்கொள்வதற்கு தேவையான அடிப்படை உதவிகளையும், மனிதாபிமான உதவிகளையும் மட்டுமே வழங்குவதாக தெரிவித்த அமெரிக்காவும், நேட்டோ மற்றும் மேற்குலகமும், உக்ரைனில் ரஷ்யாவின் நடவடிக்கைகள் தீவிரமடைய தொடங்கியதிலிருந்து படிப்படியாக உக்ரைனுக்கான இராணுவ உதவிகளை அதிகரித்ததோடு, இப்போது கனரக ஆயுதங்களையும், கவசவாகனங்களையும் வழங்குகின்றன.

உக்ரைனை கருவியாக வைத்து, ரஷ்யாவோடு அறிவிக்கப்படாத போரொன்றை அமெரிக்காவும் மேற்குலகமும் முன்னெடுத்திருப்பதாக தொடர்ச்சியாக குறிப்பிட்டு வரும் ரஷ்ய அதிபர், மேற்குலகமும், அமெரிக்காவும் வழங்கும் கனரக ஆயுதங்கள் மற்றும் கவசவாகனங்களை பாவித்து, உக்ரைனிலுள்ள ரஷ்ய நிலைகள் தாக்கப்பட்டால், கடும் எதிர்விளைவுகளை அமெரிக்காவும், மேற்குலகமும் எதிர்கொள்ள வேண்டி வருமென தொடர்ச்சியாக எச்சரித்து வந்துள்ள நிலையில், அவசியமேற்படும்போது அணுவாயுதம் பாவனைக்கு எடுக்கப்படுமென ரஷ்ய முன்னாள் அதிபர் அண்மையில் தெரிவித்திருந்தமையும் நினைவுகூரத்தக்கது. இந்நிலையில், ரஷ்யாவோடு நிலப்பரப்பு எல்லையை கொண்டுள்ள நோர்வேக்கான நேரடி எச்சரிக்கை ரஷ்ய அதிபரால் விடுக்கப்பட்டுள்ளமை இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply