களம் சென்ற உங்களை
கண்கள் காணவில்லை!
விடம் தின்று விதைந்தீரோ
களம் வென்று மறைந்தீரோ
நாமறியோம்!
கண்கண்ட கடவுளாய்
நேர் நின்றதை நாமறிவோம்!
மண்கொண்ட கொள்கைக்காய்
போர் புரிந்ததை நாடறியும்!
இப்போது
எங்களருகில் நீங்களில்லை!
புயலொன்றில் அகப்பட்ட படகாய்
எங்கள் இதயங்களில் நிரப்பிய
நியத்தின் விடியலுக்காய்
உங்கள் அடிதொழ வந்துள்ளோம்!
இப்போதெல்லாம்
ஆயிரமாயிரம் பேதங்களை
விதைத்தவாறும்
சுயநலங்களை உயிர்ப்பித்தவாறும்
மாலைச்சூரியன் சுமைகளை
தாங்கமுடியாது
இருளுக்குள் ஒழிந்துபோகிறது!
நீங்கள்
கட்டியெழுப்பிய
சமதர்மம் புற்றுநோய் பிடித்து
மெல்ல மெல்ல சாகிறது!
உங்கள்
தியாகங்களால்
செதுக்கப்பட்ட
பண்பாடு பாழடைந்த
வீடாய் இடிகிறது!
ஆனாலும்
இன்னும் நம்பிக்கை
சாகவில்லை!
உங்களின் தியாகம்
தீயதை அழித்து
நல்லதை விதைக்கும்!
தூயவன்