நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணையும் பின்லாந்தின் திட்டம் மிகவும் மோசமான பின்விளைவுகளை அந்த நாட்டிற்கு ஏற்படுத்தும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. பின்லாந்து நேட்டோ ராணுவ பாதுகாப்பு அமைப்பில் இணையும் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்தால் மிகப்பெரிய பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரஷ்யாவின் சட்டமியற்றும் குழுவின் உறுப்பினரான விளாடிமிர் ஜாபரோவ் எச்சரித்துள்ளார்.
பின்லாந்தின் இந்த செயல்பாடானது அவர்கள் மீதான தாக்குதலுக்கு வலுவான காரணங்களை அவர்களே உருவாக்கி, நாட்டை அழிக்க எடுக்கும் பாதுகாப்பான முயற்சி என தெரிவித்துள்ளார்.
இதனை ஆண்டுகளாக பின்லாந்து மற்றும் ரஷ்யா இடையே நிலவிவந்த வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புகள் இத்தகைய விரும்பத்தகாத முன்னெடுப்புகள் மூலம் தடைப்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பின்லாந்து அரசு, நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் தொடர்ந்து இணைய முற்பட்டால், அது அந்தநாட்டின் மிகப்பெரிய மூலோபாய தவறு மற்றும் பயங்கர சோகத்தை ஏற்படுத்தும் முடிவு என எச்சரித்துள்ளார்.
இந்த எச்சரிக்கையானது, பின்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் பெக்கா ஹாவிஸ்டோ வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து வெளிவந்துள்ளது.
அதில், நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைவதற்கான பின்லாந்தின் முயற்சியில் அதன் உறுப்பு நாடுகள் உதவ முன்வந்து இருப்பதாகவும், பின்லாந்தின் விண்ணப்பம் நான்கு மாதங்கள் முதல் ஒருவருடத்திற்குள் ஏற்றுக்கொள்ளப்படலாம் என தெரிவித்து இருந்தார் எனபது குறிப்பிடத்தக்கது.