வடமராட்சி, நெல்லியடியில் உள்ள வெதுப்பக ஊழியர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து உருவாகிய வெதுப்பக கொத்தணியில் நேற்றைய தினம் மேலும் பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (மே-18) யாழ். குடாநாட்டில் 95 பேர் உட்பட வடக்கில் 137 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
இவ்வாறு தொற்று உறுதியானவர்களில் கரவெட்டி சுகாதார அதிகரி பிரிவில் 36 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். இவர்களில் 33 தொற்றாளர்கள் நெல்லியடி வெதுப்பக கொத்தணியுடன் தொடர்புபட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 12 ஆம் திகதி வெதுப்பக கொத்தணியில் 11 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் நேற்று மேலும் 33 பேருக்கு தொற்று உறதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு குறித்த வெதுப்பக கொத்தணியுடன் தொடர்புபட்டு ஒரே நாளில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை நிலமையின் தீவிரத்தை வெளிப்படுத்துவதாகவே சுகாதாரத் தரப்பினரால் அவதானிக்கப்பட்டுள்ளது.
யாழ். வடமராட்சி, நெல்லியடி பகுதியில் அமைந்துள்ள பிரபல வெதுப்பகம் ஒன்றின் ஊழியருக்கு கடந்த மே-10 ஆம் திகதி தொற்று உறுதி செய்யப்பட்டிருந்ததையடுத்து குறித்த வெதுப்பகம் மூடப்பட்டு, சுகாதாரத் துறையினரால் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆகவே, பொதுமக்கள் இயன்றளவு வெளி நடமாட்டங்களை குறைத்து சுகாதாரத் தரப்பினரது அறிவுறுத்தலை முறையாக பின்பற்றி சுகாதார-பாதுகாப்பு நடைமுறைகளைப் பேணுவதன் மூலமே தற்போதைய கொரோனா அச்சுறுத்தல் நிலையில் இருந்து எம்மையும் எமது சமூகத்தையும் பாதுகாத்துக் கொள்ள முடியும்.