உடும்பன் குள படுகொலை நினைவு நாள்
அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் தொகுதியில் உள்ள தங்கவேலாயுதபுரத்தை அண்டிய கிராமம் தான் உடும்பன்குளம். திருக்கோவில் பகுதியிலிருந்து 20 கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள விவசாய கிராமம் தான் உடும்பன்குளம்.
கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தின் பெரும்பகுதி நீர் வளமும் வனப்பும் மிக்க பிரதேசங்களாகும். இதனால் தான் அம்பாறை மாவட்டத்தின் தமிழர் நிலங்களை அபகரிக்கும் நோக்கில் சிங்களவர்களும் முஸ்லீம்களும் திட்டமிட்டு செயற்பட்டனர். இதற்காக அவர்கள் கையாண்ட உத்தி. தமிழர்களை படுகொலை செய்து அவர்களை அந்நிலங்களிலிருந்து அகற்றுவதாகும்.
1956ஆம் ஆண்டு நடந்த இங்கினியாகல படுகொலை தொடக்கம் இன்று வரை இந்த வரலாறு தொடர்கிறது.
தங்கவேலாயுதபுரத்தை அண்டிய உடும்பன்குளம் கிராமம் வயல்நிலங்களையும் அருவிகளையும் மலைகளையும் கொண்ட அழகிய வனப்பு மிக்க கிராமமாகும்.
தங்கவேலாயுதபுரம், உடும்பன்குளம் கிராமமக்கள் மட்டுமன்றி அட்டப்பள்ளம், அக்கரைப்பற்று போன்ற தமிழ் கிராமங்களிலிருந்தும் வேளாண்மை செய்கைக்காக உடும்பன்குள மலையடிவாரங்களில் வாடிகளை அமைத்து வயல் அறுவடை முடியும் வரை வாழ்ந்து வருவது வழக்கமாகும்.
வயல் வேளாண்மைச்செய்கை காலத்தில் மலையடிவாரங்களில் சோளன், கீரை, மற்றும் மரக்கறிகளையும் பயிரிட்டு தங்கள் உணவு தேவைகளை பூர்த்தி செய்வார்கள். உணவுத்தேவைக்காக அருகில் உள்ள குளம் ஒன்றில் மீன்பிடிப்பதும் வழமையாகும்.
இயற்கையோடு தங்களை பிணைத்துக்கொண்டு தங்களுக்கான சுயதேவைகளை தாங்களே பூர்த்தி செய்து கொண்டு சந்தோசமாக அக்கிராம மக்கள் வாழ்ந்து வந்தார்கள்.
வயல் விதைப்பு ஆரம்பமாகும் போதும் அறுவடை முடிந்த பின்பும் தமது குலதெய்வங்களுக்கு படையல் செய்வதுடன் அறுவடையின் ஒரு பகுதியை ஏழைகளுக்கு தானமும் செய்து வந்தார்கள்.
இயந்திரமயமான வாழ்க்கை வட்டத்திற்குள் சிக்காது அக்கிராமத்தின் வளங்களை கொண்டு தன்னிறைவான உற்பத்திகளை மேற்கொண்டு நிறைவாக வாழ்ந்தவர்கள் தான் தங்கவேலாயுதபுரம் மற்றும் உடும்பன்குள மக்கள்.
அந்த மக்களுக்கு பேரிடியாக அமைந்த சம்பவம் தான் உடும்பன்குள படுகொலை. அந்த சம்பவம் நடைபெற்று மூன்று தசாப்தங்கள் கடந்து விட்ட போதிலும் அந்த சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து இழப்பிலிருந்து மீள முடியாதவர்களாகவே அவர்கள் உள்ளனர்.
உடும்பன்குளம் படுகொலையில் பலியானவர்களின் உறவினர்கள் இப்போது பல கிராமங்களில் சிதறி வாழ்ந்து வருகின்றனர்.
இந்த படுகொலையில் சிக்கி பலியானவர்களின் பெரும்பாலானவர்கள் தங்கவேலாயுதபுரம், உடும்பன்குளம், அக்கரைப்பற்று, அட்டப்பள்ளம் போன்ற கிராமங்களை சேர்ந்தவர்களாகும்.
இந்த கொலை சம்பவம் தற்செயலாக படையினரால் மேற்கொண்ட சம்பவமோ அல்லது படையினர் மீது போராளிகள் தாக்குதல் நடத்தியதற்கான பதில் தாக்குதலோ அல்ல.
இந்த கிராம மக்களை அழித்து அங்கிலிருந்து தமிழர்களை துரத்த வேண்டும் என்பதற்காக முஸ்லீம்களால் நீண்டகாலமாக திட்டமிடப்பட்டு சிறிலங்கா படையினரின் உதவியுடன் நடத்தப்பட்ட திட்டமிட்ட படுகொலையாகும்.
மாசி மாதம் நெல் அறுவடைகாலமாகும். 1986 மாசி 19ஆம் திகதி காலை வழமைபோல பல கிராமங்களிலிருந்து வந்த மக்கள் அறுவடை வேலைகளிலும் சூடடிப்பு வேலைகளிலும் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள்.
தமிழர்களை படுகொலை செய்வதற்கான திட்டத்தை தீட்டியிருந்த முஸ்லீம்கள் சிலர் கொண்டைவெட்டுவான் முகாமிலிருந்த படையினருக்கு சாராயப்போத்தல்களை வழங்கியிருந்தனர்.
முஸ்லீம் காடையர்களும் கொண்டைவெட்டுவான் முகாமிலிருந்த படையினரும் 19-02-1986 அன்று காலை ஏற்கனவே திட்டமிட்டபடி உடும்பன்குளம் கிராமம் நோக்கி சென்றனர்.
உடும்பன்குள வயல்பிரதேசத்தில் சூடடிப்பு வேலைகளில் ஈடுபட்டிருந்த தமிழ் மக்களை சுற்றி வளைத்து கொண்டனர்.
தப்பி ஓடியவர்கள் மீது விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கி பிரயோகம் செய்தனர். துப்பாக்கி பிரயோகத்திலும் சிலர் இறந்தனர். சிலர் காயங்களுடன் தப்பி சென்றனர்.
சுற்றிவளைப்பில் அகப்பட்டவர்களை பிடித்து கைகளையும் கண்களையும் கட்டி விட்டு அவர்கள் கொண்டு வந்த கத்திகள் வாள்களால் அவர்களை வெட்டி குற்றுயிருடன் வைக்கோலில் போட்டு எரித்தனர். விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கி சகிதம் சுற்றி நிற்க வாள்கள் கத்திகளுடன் வந்த முஸ்லீம் காடையர்களே தமிழர்களை வெட்டிக்கொன்றனர்.
இச்சம்பவத்தில் 132பேர் கொல்லப்பட்ட போதிலும் 39 சடலங்களை மட்டுமே கொல்லப்பட்டவர்கள் யார் என அடையாளம் காணமுடிந்தது.
இச்சம்பவத்தில் காயமடைந்து உயிர் தப்பிய சியாமளா என்ற பெண் அன்று நடந்த சம்பவத்தை இப்படி விளக்கினார்.
அப்போது நான் சிறுமியாக இருந்தேன். நாங்கள் அப்போது அக்கரைப்பற்றில் வசித்தோம். எங்களுக்கு உடும்பன்குளத்தில் 15 ஏக்கர் வயல் இருந்தது. அதில் அப்பா விவசாயம் செய்து வந்தார். அது அறுவடைக்காலம் என்பதால் அதற்குத் தேவையான பொருட்களுடன் எங்கள் இரண்டு உழவு இயந்திரங்களில் நாம் அனைவரும் உடும்பன்குளத்திற்குச் சென்று, மலை அடிவாரத்தில் வாடிகள் அமைத்துத் தங்யிருந்தோம்.
எங்களோடு அம்மா, அப்பா, அப்பப்பா, அப்பம்மா, இரண்டு சித்தப்பாக்கள் மற்றும் வேறு சில உறவினர்களும் வந்தார்கள். ஆண்கள் அனைவரும் வயலில் அறுவடைக்குச் செல்வார்கள். பெண்கள் மலையில் உள்ள வாடியில் தங்கியிருந்து வயலில் வேலைசெய்வோருக்காக உணவு சமைப்பார்கள்.
அன்றும் அப்படித்தான், வழமையான வயல் வேலைகள் நடந்துகொண்டிருந்தன. முற்பகல் வேளை வேலை செய்து கொண்டிருந்த பலரும் இளைப்பாறுவதற்காகவும் உணவு உண்பதற்காகவும் மலையடிவாரத்திற்கு வந்திருந்தார்கள். அப்பா சூடடிப்பிற்கான ஆயத்த வேலைகளை செய்து கொண்டிருந்தார்.
அப்பாவின் தம்பி கண்ணன் அப்போது க.பொ.த சாதாரணம் படித்துக்கொண்டிருந்தார். அவரும் எங்களுடன் சூடடிப்பு வேலைக்காக வந்திருந்தார்.
அவ்வேளையில் படையினர் சுற்றிவளைத்து வயலுக்குள் நுழைந்தனர். வேலையில் மும்முரமாக இருந்த அப்பாவை பிடித்து ‘டேய் எங்க எல்லாரும்’ என மிரட்ட,’எல்லோரும் மலையில் சாப்பிடினம்’ எனச் சொல்லிவிட்டார். அவர் தன் வார்த்தையை முடிக்கும் முன்னரே, இராணுவத்தோடு வந்திருந்த – அப்பாவை நன்கு தெரிந்த முஸ்லிம் ஊர்காவல் படையாளி ஒருவர் தான் வைத்திருந்த கூரிய கத்தியால் என் அப்பாவின் வயிற்றில் குத்திவிட்டார். அப்பா ‘கண்ணா ஓடு கண்ணா ஓடு’ என்று சித்தப்பாவின் பெயரைச் சொல்லி கதறினார். அந்த அலறல் சத்தம் கேட்டுத்தான் எல்லோரும் வயல் பக்கம் திரும்பிப் பார்த்தோம். அப்பா இரத்த வெள்ளத்தில் கிடக்கிறார். வயலுக்கு அருகில் ஓடிக்கொண்டிருந்த அருவிக்கரையில் அவரைத் தூக்கிப் போட்டார்கள். அதன் பின்னர் மலையில் பயப்பீதியில் உறைந்திருந்த எம் அனைவரையும், துப்பாக்கி – வாள் முனையில் கைதுசெய்து வயலுக்குள்கொண்டு வந்தார்கள். அதில் ஆண்களை கண்களையும் கைகளையும் கட்டி வயலில் அமரவைத்து சரமாரியாகத் தாக்கினார்கள்.
பெண்களை அவ்விடத்தை விட்டு ஓடச் சொன்னார்கள். சற்றுத் தூரம் ஓடியதும் எம்மை நோக்கி இராணுவத்தினர் சுடத்தொடங்கினார்கள். அவ்வாறு ஓடும் சுடப்பட்டதனால் தான் நான் காலில் படுகாயமடைந்தேன். அப்படியே ஓடி எம் ஊர் வந்து சேர்ந்தோம்.
இராணுவம் சுற்றி வளைத்துப் பிடித்து தாக்கிக்கொண்டிருந்தவர்களின் என் உறவு முறையான அண்ணா ஒருவரும் இருந்தார். அவர் வாய்பேசமுடியாதவர். அவரை இராணுவம் கண்களைக் கட்டிவிட்டு, ஓடச் சொல்லியிருக்கிறது. அவரோ தட்டுத்தடுமாறி ஓடி, மலையடிவாரத்தில் மறைந்திருந்து, வயலுக்குள் நடப்பதைப் பார்த்திருக்கிறார். அந்த வயல்வெளிக்குள் பிடிக்கப்பட்டிருந்த மிகுதியானவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அவரே தப்பி வந்து ஊரவருக்கு சைகை மூலம் சொன்னார்.
இராணுவம், சுற்றிவளைத்த அனைவரையும் அடித்தும், துப்பாக்கியால் சுட்டும், வாளால் வெட்டியும் கொன்றிருக்கிறது. எனது அப்பா அப்போது இறக்கவில்லை. வயலுக்கு அருகான அருவியில் குற்றுயிரும், குறையுயிருமாகக் கிடந்திருக்கிறார். அந்நேரம் காயமடைந்த – இறந்த அனைவரையுமே எங்களின் உழவு இயந்திரத்தில் குவித்து எரித்திருக்கின்றனர். பலர் உயிரிரும் தீயில் கருகி, துடிதுடித்து இறந்திருக்கின்றனர்.
வயலில் வேலைக்கு வந்திருந்தவர்கள் மட்டும் இந்தப் படுகொலையில் கொல்லப்படவில்லை. எங்கள் கிராமங்களில் வயல் அறுவடை முடிந்து, சூடடிக்கும் நாட்களில் வறியவர்களுக்கு கடகக் கணக்கில் நெல் தானம் செய்வது வழமை. அதற்காக அயல் ஊர்களில் இருந்து வறுமைப்பட்டவர்கள் வயல்வேலை நடக்கும் இடங்களுக்கு வருவார்கள். அவ்வாறு தான் அன்றைய தினம் உடும்பன்குள வயல்வெளிக்கும் தானம் பெறுவதற்காக அயல் கிராமத்தவர்கள் வந்திருந்தனர். அவர்களைக் கூட இராணுவம் விட்டுவைக்கவில்லை. அனைவரையுமே சுட்டுக்கொன்றனர்.
எல்லாம் முடிந்து விட்டது. இப்போதும், அப்பாவையும் எங்கள் கிராமத்தவர்களையும் கூட்டாக எரித்த உழவு இயந்திரத்தின் பாகங்கள் எங்கள் வீட்டில் உண்டு. அதனை இப்படுகொலையின் நினைவுச் சின்னங்களாக வைத்திருக்கிறோம் என சியாமளா என்ற அந்த பெண் தெரிவித்திருக்கிறார்.
இந்தப் படுகொலையில் 132 தமிழர்கள் கொல்லட்டனர். இதனை லெப்ரினன் சந்திரபால என அழைக்கப்பட்ட அதிகாரியின் கீழ் இயங்கிய இராணுவத்தினரும், முஸ்லிம் ஊர்காவற்படையைச் சேர்ந்த 12 பேரும் இணைந்து மேற்கொண்டதாக அக்காலப்பகுதியில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
இப் படுகொலை செய்தி வெளிவந்த போது அதனை மறுதலித்த அன்றைய ஆட்சியாளரான தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலக்முதலி சட்டவிரோதமாக கஞ்;சா பயிரிட்ட பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை சுட்டதன் காரணமாக படையினர் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் இதில் 40 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்றும் கூறியிருந்தார்.
இப்படுகொலை சம்பவம் பற்றி கேள்விப்பட்ட மட்டக்களப்பு பிரஜைகள் குழுத்தலைவர் வண.பிதா சந்திரா பெர்னாண்டோ தலைமையிலான பிரஜைகள் குழுவினர் மனித உரிமை அமைப்பு ஒன்றின் உதவியுடன் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்றிருந்தது.
வைக்கோலில் போட்டு எரிக்கப்பட்ட சடலங்களை மீட்டெடுத்தனர். இச்சடலங்களில் 39 சடலங்களை மட்டுமே உறவினர்களால் அடையாளம் காண முடிந்தது. ஏனைய சடலங்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு எரிந்து சம்பலாகி விட்டது. இச்சடலங்களை எடுத்து ஒரே புதைகுழியில் அடக்கம் செய்தனர்.
இச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் ஆ.நல்லதம்பி. வடமராட்சி கிழக்கு ஆழியவளையை சேர்ந்த இவர் அட்டப்பள்ளம் ஐந்தாம் குறிச்சியில் திருமணம் செய்திருந்தார். இவருக்கு ஐந்து பிள்ளைகள் இருந்தனர்.
வயல் அறுவடை வேலைக்கு நல்லதம்பியுடன் அவரின் ஒரு மகனும், இரு மகள்களின் கணவன்மாரும் சென்றிருந்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரும் இச்சம்பவத்தில் கொல்லப்பட்டனர்.
132பேர் கொல்லப்பட்ட போதிலும் 98 சடலங்கள் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. இவர்களில் 39 சடலங்களை மட்டுமே அடையாளம் காண கூடியதாக இருந்தது.
அடையாளம் காணப்பட்ட 39பேரின் பெயர் விபரங்கள்.
1. இராசையா தவேந்திரன்.
2. இராமசாமி கந்தையா.
3. ந.கோபாலகிருஷ்ணன்.
4. ந.விநாயகமூர்த்தி.
5. க.பாக்கியராசா.
6. கதிரேசபிள்ளை வைரமுத்து.
7. குமாரவேல் நாகராசா.
8. கணேசமூர்த்தி பேரின்பன்.
9. கணேசபிள்ளை மோகனராசா.
10. கணபதி வடிவேல்.
11. பத்மநாதன்.
12. மைலன் தியாகராசா.
13. தர்மன்.
14. தசாப்பு செபமாலை.
15. தசாப்பு செல்லையா.
16. துரை இராமலிங்கம்.
17. தம்பிப்பிள்ளை குமாரவேல்.
18. மயில்வாகனம் தியாகராசா.
19. மார்க்கண்டு ரவீந்திரன்.
20. முத்துப்போடி சுமணாவதி.
21. முத்துசாமி முத்துலிங்கம்.
22. மசன்னா ஜெயராஜ்.
23. ஆ.நல்லதம்பி.
24. ஆ.சோமசுந்தரம்.
25. பொன்னன் இராசதுரை.
26. பொன்னம்பலம் யோகராசா.
27. சோமசுந்தரம் கருணாநிதி.
28. வெங்கிட்டன் குழந்தை.
29. ஞானமுத்து புவனேந்திரன்.
30. சுந்தரம் சின்னவன்.
31. சீனித்தம்பி.
32. சீனித்தம்பி தவநாதன்.
33. சீனித்தம்பி அருள்செல்வன்.
34. சில்வெஸ்டர் இன்னாசி.
35. சுவாமி டேவிட்.
36. வைரமுத்து சுந்தரலிங்கம்.
37. வர்ணகுலசிங்கம் புண்ணியமூர்த்தி.
38. விஸ்வகேது இராசா.
39. ரங்கன் போல்.
இப்படுகொலை நடைபெற்ற காலப்பகுதி பதற்றமும் அச்சமும் நிறைந்த காலமாகும். படையினரின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாது மட்டக்களப்பு நகரில் இருந்த பிரஜைகள் குழுத்தலைவர் வணபிதா சந்திரா பெர்ணாண்டோ தலைமையிலான குழுவினர் உடும்பன்குளத்திற்கு சென்று இப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை புரிந்தனர்.
இத்தகைய இடர்கால பேருதவிகளை புரிந்த வணபிதா. சந்திரா பெர்ணாண்டோ அவர்களை ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தினர் மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்திற்குள் வைத்து சுட்டுக்கொன்றனர்.
இப்படுகொலை பற்றி 22 பெப்ரவரி வெளிவந்த கார்டியன் ஆங்கில பத்திரிகையில் செய்தி வெளியாகியிருந்தது.
அச்செய்தியில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
Upto 80 people mainly Tamil farm workers are said to have been killed and their bodies burned in a massacre in eastern Sri Lanka. The killings happened on Wednesday (19 February 1986), but confirmation of the incident was made only yesterday after community leaders had visited the remote spot near the town of Akkaraipattu, where the farm workers were shot.
According to community leaders, the farmworkers were threshing the paddy fields when troops appeared from the jungle firing into the air. The women were freed, but the soldiers rounded up the men, tied their hands and made them sit on the road while the soldiers reportedly moved into a nearby village and looted the shops.
The farmworkers were taken back to the paddy fields and shot. Several empty cases of ammunition have been found in the field. The bodies were piled on top of the dry rice harvest and burned.
“There is very clear evidence now emanating that violence directed against the Tamil minority is indiscriminate and makes no distinction between those engaged in conflict and innocent civilians…
1986ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் 42ஆவது அமர்வில் இந்திய பிரதிநிதிகள் குழுவுக்கு தலைமை தாங்கிய டி.எஸ்.டிலோன் உடும்பன்குளம் படுகொலை சம்பவம் பற்றி ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.
ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழுவின் இக்கூட்டத்தொடரில் அவுஸ்திரேலியா பாராளுமன்ற குழுவின் தலைவர் செனட்டர் ஏ.எல்.ஹிஸ்ஸன் அவர்களும் இப்படுகொலை பற்றி ஐ.நா.வின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.
லண்டனை தலைமையகமாக கொண்ட சர்வதேச மன்னிப்புச்சபையின் 1986ஆம் ஆண்டு ஆண்டறிக்கையிலும் உடும்பன்குளம் படுகொலை பற்றி விபரிக்கப்பட்டிருக்கிறது.
இந்த படுகொலையை யார் செய்தார்கள் என்ற விபரங்களை சர்வதேச மன்னிப்புச்சபை தனது ஆண்டறிக்கையில் தெரிவித்திருந்தது.