பாலஸ்தீன நகரமாக காசா மீது இஸ்ரேல் இயன்ற எல்லா வழிமுறைகளிலும் பயங்கரத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. மக்கள் வசிக்கும் முகாம்கள், பள்ளிகள் என குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் அதே சூழலில் காசாவுக்குள் எந்த உணவும், உதவிப் பொருட்களும் செல்ல முடியாதபடி பார்த்துக்கொள்வதில் இஸ்ரேல் தீவிரமாக இருக்கிறது. இதனால் குழந்தைகள், பெண்கள் என அனைவரும் பசியாலும், ஊட்டச்சத்து குறைபாட்டாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பான புகாரில் சர்வதேச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறையின் சட்ட ஆலோசகர் ஜோசுவா சிம்மன்ஸ், பாலஸ்தீனியர்களுக்கான ஐ.நா. அகதிகள் நிறுவனம் காசாவில் செயல்படுவதைத் தடை செய்ய இஸ்ரேலுக்கு உரிமை உண்டு என்று கூறியிருக்கிறார்.
அந்நிறுவனத்தின் நடவடிக்கைகள் தடுக்கப்பட்டதால் ஊட்டச்சத்து குறைபாட்டால் காசாவில் 52 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 50 பேர் குழந்தைகள்.
இதற்கிடையில் மீன் பிடிக்க செல்லும் காசா மீனவர்கள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
எல்லா வழிகளும் அடைக்கப்பட்ட பின் பட்டினியை போக்க காசா மக்கள் கரையொதுங்கும் கடல் ஆமைகளை உண்டு உயிரைப் பிடித்துக்கொண்டு இஸ்ரேலின் அடுத்த வான்வழித் தாக்குதல் எங்கு எப்போது நடக்குமோ என்ற அச்சத்தோடு வாழ்ந்து வருகின்றனர்.
அல் ஜசீரா செய்தியின்படி. மீனவர் அப்துல் ஹலீம் கூறுகையில், கடல் ஆமைகளை சாப்பிடுவது பற்றி தான் ஒருபோதும் யோசித்ததில்லை என்றும், வேறு வழியில்லை என்பதால் மட்டுமே அவற்றை சாப்பிடுவதாகவும் கூறுகிறார்.
“குழந்தைகள் ஆமையைப் பார்த்து பயந்தார்கள்… அதன் இறைச்சி சுவையாக இருப்பதாக நாங்கள் அவர்களிடம் சொன்னோம்,” என்று காசாவைச் சேர்ந்த மஜிதா கானன் கூறினார்.