உதவிக்கரம் நீட்டும் சீனா; பயப்படும் மேற்குலகம்! “கொரோனா” அதிர்வுகள்!!

You are currently viewing உதவிக்கரம் நீட்டும் சீனா; பயப்படும் மேற்குலகம்! “கொரோனா” அதிர்வுகள்!!

“கொரோனா” வைரசின் நதிமூலமென கணிக்கப்படும் சீனா, “கொரோனா” வைரசுக்கு 3.200 பேரை பலிகொடுத்துள்ள நிலையிலும், 80.000 பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மேற்குலக நாடுகளுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது.

இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளுக்கு சீனாவின் மருத்துவ விற்பன்னர்கள் அணியோடு, அத்தியாவசியமான மருத்துவ உபகரணங்களும் அனுப்பப்பட்டுள்ள நிலையில், சீனாவின் மேற்குலகத்துக்கான உதவிக்கரம், மேற்குலக நாடுகளால் சந்தேகக்கண்களோடு பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

“கொரோனா” வைரசால் பாதிக்கப்பட்டுள்ள மேற்குலக நாடுகள்மீது சீனா கரிசனை கொண்டுள்ளதென சீன வெளியுறவுத்துறை அமைச்சர் “Lou Zhaohui” தெரிவித்திருப்பதை தொடர்ந்து, சீனாவின் மேற்குலகத்துக்கான உதவிக்கரத்தின் பின்னால் வேறு உள்நோக்கம் இருக்கக்கூடுமென மேற்குலக நாடுகள் அச்சம் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

தனது நாட்டில் “கொரோனா” வைரசு ஏற்படுத்தியுள்ள நாசகார அழிவுகளை மறைக்க விரும்பும் சீனா, மேற்குலக நாடுகளில் “கொரோனா” பாதிப்பு என்பதை முன்னிலைப்படுத்துவதன் மூலம், தனது வைத்திய நிபுணர்களை பாதிக்கப்பட்ட மேற்குலக நாடுகளுக்கு அனுப்பி வைப்பதனூடாகவும், மேற்குலக நாடுகளுக்கு தேவையான அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை அனுப்பி வைப்பதனூடாகவும் தனது அரசியல் ஆளுமையையும், பொருளாதார ஆளுமையையும் மேற்குலக நாடுகளுக்கு மீண்டும் சொல்லிவைக்கும் வாய்ப்பாக “கொரோனா” நிலைமையை பயன்படுத்துவதாக மேற்குலக நாடுகள் அங்கலாய்க்கின்றன.

தற்போதுள்ள சூழ்நிலையில், மேற்குலக நாடுகளுக்கு தேவையான அத்தியாவசிய மருத்துவ உபககரணங்களை பெருமளவில் கொடுத்துதவும் வல்லமையும், உற்பத்தி செய்யும் வல்லமையும் சீனாவுக்கே உண்டு என்பதையும், சீனாவை மட்டுமே தற்போது தாம் நம்பியிருக்க வேண்டியுள்ளதையும் ஒத்துக்கொள்ளும் மேற்குலக நாடுகள், எதுவாயினும் உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தில், தன்னை நம்பியே மேற்குலக நாடுகள் இருக்கவேண்டுமென்பதை மீண்டுமொருமுறை நிரூபிப்பதற்கு சீனா முயல்கிறது என்பதை தாம் புரிந்து கொள்வதாகவும் தெரிவிக்கின்றன.

பகிர்ந்துகொள்ள