பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டத்திற்கு கூட்டத்துக்கு கூட்டமைப்பு எதற்காகச் செல்கின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,“நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையைத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட எதிர்க்கட்சிகள் முன்வைத்திருந்தன.
இதனைக் கூட்ட முடியாது என ஜனாதிபதியும், பிரதமரும் தெளிவாகவே பதிலளித்துவிட்டார்கள்.
இந்த நிலையில் அலரி மாளிகையில் பிரதமர் அழைத்திருக்கும் கூட்டத்துக்கு கூட்டமைப்பு செல்லப் போகின்றது.
இது போன்ற உத்தியோகபூர்வமற்ற சந்திப்புக்களால் எதனைச் சாதிக்க முடியும் என கூட்டமைப்பு எதிர்பார்க்கின்றது.
இது போன்ற பலனற்ற கூட்டங்களுக்குச் செல்லலாம் என்றால் நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு அவர்கள் கேட்டுக்கொண்டது எதற்காக.இவ்வாறான சந்திப்பின் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காணமுடியுமென்றால், வெறுமனே ஒரு நேர ஒதுக்கீட்டைக் கேட்டுவிட்டு ஜனாதிபதியையோ பிரதமரையோ கூட்டமைப்பினர் சந்தித்திருக்க முடியும்.
அலரி மாளிகைச் சந்திப்பை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கும் நிலையில் அதில் கலந்துகொள்வதன் மூலம் அரசாங்கத்துக்கான ஒரு சாதகமான சமிஞ்ஞையைக் காட்டுவதற்கு கூட்டமைப்புத் தலைமை முற்படுவதாகவே தெரிகின்றது.
இதன் மூலம் அரசாங்கத்துக்கும் தமக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்துக்கொள்வதற்கு அவர்கள் முற்படலாம். நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்பதற்காகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்துவந்தவர்களுள் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் முக்கியமானவர்.
இந்தக் கூட்டத்தின் மூலமாக எந்தப் பலனும் கிடைக்கப்போவதில்லை. நாடாளுமன்றத்தைக் கூட்டப்போவதில்லை என்பதில் அரசாங்கம் உறுதியாகவுள்ளது.
நாடாளுமன்றத்தைக் கூட்டச் செய்வதற்கு நீதிமன்றம் மூலமாக மட்டுமே முடியும். இது போன்ற சந்திப்பு வெறும் கண்துடைப்பாக மட்டுமே இருக்கும்.
இது சம்பந்தனுக்கும் தெரியும். சுமந்திரனுக்கும் தெரியும்.
அதனைத் தெரிந்துகொண்டும் அவர்கள் செல்வதற்குக் காரணம் அரசுடனான இடைவெளியைக் குறைப்பதும், அரசாங்கத்துக்கு சாதகமான சமிஞ்ஞை ஒன்றைக் கொடுப்பதுமாக மட்டுமே இருக்க முடியும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்