திசைகள் தாண்டிக் கிடக்கின்ற மர்மத்தை
எத்தனை முறை தான் குத்திப் பார்த்தாச்சு.
திரவியம் தேடிட ஈழத் திரைகடலோடியதை
எத்தனையோ பொழுதுகளோடு சேர்த்தாச்சு.
தீட்டான புதினத்தை அடுக்கி அடுக்கி வைத்து
தில்லு முல்லாகிறது சிலரால் தேசிய முடிச்சு.
திறம் தரம் கடந்த மெளன வழியை உடைத்து
போலித் திசை ஊமைகளின் மொழிப்பேச்சு.
கரிகாலனின் கதைகளைப் புனிதமாக்கியபடி
களத்தில் அழியாத ஆயுத விரல் தடயங்கள்.
காவியத்தலைவனைக் குத்திக் கிழித்தாடி
கலவரப் பாதையில் ஆடும் சடுகுடுப் பரதங்கள்.
வாணிப இலாபத்தை வரைபடம் கீறிவைத்து
வறண்ட மனதில் எழுகின்ற துரோக ஓசைகள்.
வல்வையின் வரமதை வீதியில் போட்டு விற்று,
வணங்கிடும் மேதகுவை தறிக்கின்ற வசைகள்.
குற்றக் குப்பைக்குள் வீரர்களைத் தள்ளி விட்டு
குலத்தமிழுக்கு துட்டகைமுனுப் பட்டமளிப்பு.
“குரங்கு” தானே பூமாலையை எடுத்து வைத்து
“குட்டிகளோடு” சேர்ந்து இரண்டக வாக்களிப்பு.
இராஜ நடையை நொண்டிக்கால் கேலிசெய்ய
இராச்சியம் தேடுதடா கூவஆறு ,போடு அணை.
இலட்சிய மேடையைத் தந்தவனை மனதாக்கி
இறுதி வரை உப்பிட்டவனை உள்ளளவும் நினை.