உயிர்மெய்யாய் இரு..
மெல்லென முகை அவிழ்க்கும் மலராய்
கருவுடைத்து முகம் காட்டும் மகவாய்
குருத்தோலையின் குதூகலிப்பாய்
உருண்டு வரும் புதிய ஆண்டே!
திரண்டு வரும் தேனின் சுவையாய்
பின் இரவில் ஒளிரும் நிலவாய்
குளிர்ந்து வருகிறது புதுக்காற்று!
இருண்டு போன நிலம் கழுவி
உயர்ந்த வாழ்வு எமைத் தழுவி
நலிந்த வாழ்வு எமை நழுவி
தெளிந்த நீரோடையாய்
உளம் வடிந்து ஓட உரிமைக்காய்
உயர்ந்தவரின் கனவு தாங்கி
நெடும் தவத்தின் குறி ஓங்கி
வாடும் வம்சத்தின் பிணி நீங்கி
உயிரில் உரசிச் சுடுகிறது
உயிரள்ளி தந்தவரின் கீற்று!
ஆடும் வஞ்சகத்தின் வாலை நறுக்கி!
நீளும் துரோகத்தின் காலை நொருக்கி!
ஆளும் இனத்தின் செருக்கை நிமிர்த்தி!
வீழும் வீணரின் முதுகை தூக்கி!
வணங்கா மண்ணின் பண்ணினைப் பாடி!
தணியா தாகத்தின் கனவினை நாடி!
அணையா விளக்காய் மிளிரும் சூரியரே!
விதைத்த நிலம்தனில் விளையும் வீரியரே!
உங்கள் நினைவோடு விரிகிறது
ஆண்டு இரண்டாயிரத்து இருபத்தி மூன்று!
துவள்ந்து விடோமென சுடுகிறது மூச்சு!
துவந்தனை கடந்து போவோமென அழுத்துகிறது வீச்சு!
துவஞ்சம் தந்தவனை நீதியில் நிறுத்த பெருகிறது பேச்சு!
கரைந்து போனது
கடந்த ஆண்டு!
விரைந்து வந்தது
புத்தம் புதிய ஆண்டு!
சிதைந்து போன மனங்கள்
குவிந்து
சிந்தையில் சீரிய
எண்ணங்கள்
நிலைக்கட்டும்!
காலைக் கதிரவனின்
முக அழகாய்
சோலைக் கிளிகளின்
மகிழ்வாய்
புல்லாங் குழலிசையாய்
உள்ளத்தில்
இன்பங்கள் பெருகி
இதயங்கள் களிப்பில்
திளைக்கட்டும்!
அசைந்தாடும் காற்றின்
சுகங்களாய்
துன்பத்தின் சுமைகள்
மாறட்டும்!
இசைந்தாடும் பூக்களின்
சிரிப்பாய் ஒற்றுமை
ஓங்கட்டும்!
விழிமடல் உடைக்கும்
நீர்த்துளிகளில்
நீளும் விரல்களாய்
நாளும் பொழுதும்
நற்சிந்தனை தளைக்கட்டும்!
ஊழியுடல் ஒடுங்கும்
நிலைவரையும்
விரல்களின் கூர்மையில்
வீரியம் நிலைக்கட்டும்!
முகில்கள் கூட்டம் பூமியில்
வரைந்த மழைத்துளிகளின்
ஓவியமாய்
இதயத்தின் அறைகளை
ஈரம் நனைக்கட்டும்!
ஐம்பூதங்களையும் வென்று
உயிர் ஊதிய வீரிய விதைகளின்
விளை நிலங்களின்
மேனி கரையாது
மெய் ஞானம்
உயிர்மெய்யாய்
உனக்குள்
இருக்கட்டும்!
✍️தூயவன்