உலக தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 46 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று (10) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்னால் முற்றவெளி மைதானத்தில் அமைந்துள்ள தமிழராட்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நிறைவுத் தூபியில் இவ் நினைவேந்தல் நடாத்தப்பட்டது.
இதன்போது படுகொலை செய்யப்பட்ட ஒன்பது பேரிற்குமாக பொது சுடர் ஏற்றப்பட்டு நினைவு தூபிகளுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் தூபி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் உட்பட அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
1974ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் திகதி முதல் 10ஆம் திகதிவரை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டின்போது சிறிலங்கா படையினராலும் பொலிஸாராலும் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட கலவரத்தில் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
உலகலாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்தவிடாமல் அப்போதைய சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசு, அங்கு பொலிஸாரை அனுப்பி கலவரத்தை ஏற்படுத்தியது.
இதன்போது ஒன்பது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழர்கள் மனத்தில் நீங்காத வடுக்களாக இந்தப்படுகொலைச் சம்பவம் பதியப்பட்டுள்ளது.