உலகத் தமிழர் பேரவையின் செயற்பாடுகளை புறக்கணிக்க கோரும் 16 அமைப்புகள்!

You are currently viewing உலகத் தமிழர் பேரவையின் செயற்பாடுகளை புறக்கணிக்க கோரும் 16 அமைப்புகள்!

 

உலகத் தமிழர் பேரவையின் செயற்பாடுகளை புறக்கணிக்க கோரும் 16 அமைப்புகள்! 1உலகத் தமிழர் பேரவையின் ஏமாற்று முயற்சிகளை சர்வதேச சமூகம் புறக்கணிக்க வேண்டும் எனவும், அரைகுறையான தீர்வு தமிழ் தேசத்தின் பாதுகாப்பை மேலும் சீரழிக்கும் எனவும் 16 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் கூட்டாக சுட்டிக்காட்டியுள்ளன.

அதுமாத்திரமன்றி தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு சர்வதேச சமூகம் பரிகார நீதியை வழங்க வேண்டும்.  அத்துடன் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிப்பதன் அடிப்படையில் நீண்டகால அரசியல் தீர்வைக் காண உதவ வேண்டும் எனவும் அவ்வமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.

ஒவ்வொரு தனிநபரும் சமாதானமாகவும், கௌரவத்துடனும், நம்பிக்கையுடனும், எவ்வித பயமும் சந்தேகப்படுதலுமின்றி சமமான உரிமைகளை அனுபவித்து வாழக்கூடிய ஒரு இலங்கை உருவாக்கப்பட வேண்டும் என்ற தொனிப்பொருளை மையப்படுத்திய ‘இமயமலை’ பிரகடனம் உலகத் தமிழர் பேரவையின் ஊடகப் பேச்சாளர் சுரேன் சுரேந்திரனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கடந்த வாரம் கையளிக்கப்பட்டது.

இது குறித்து தேசிய கனேடிய தமிழர் பேரவை, ஜேர்மனி ஈழத் தமிழர் பேரவை, பின்லாந்து தமிழர் பேரவை, சுவீடன் தமிழர் தேசிய பேரவை, ஈழத் தமிழர் பேரவை – பிரிட்டன், இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் இயக்கம் என்பன உள்ளடங்கலாக உலகளாவிய ரீதியில் கனடா, நோர்வே, இத்தாலி, ஜேர்மனி, நியூஸிலாந்து, நெதர்லாந்து, பெல்ஜியம், பின்லாந்து, சுவீடன், அவுஸ்திரேலியா, டென்மார்க், பிரான்ஸ், சுவிற்ஸர்லாந்து, பிரிட்டன், மொரிஷியஸ், தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் 16 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் ஒன்றிணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

2009ஆம் ஆண்டு தமிழினப் படுகொலையின் உச்சகட்டத்தில், புலம்பெயர்ந்த தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தமிழ் குடை அமைப்பொன்றை உருவாக்கவேண்டியதன் அவசியம் உணரப்பட்டது.

அதன்படி, ஆரம்பத்தில் உலகளாவிய தமிழ் அமைப்புக்கள் தமிழர்களின் நியாயமான மற்றும் அடிப்படை அபிலாஷைகளை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டு உலகத் தமிழர் பேரவையை உருவாக்கின.

சில ஆண்டுகளுக்குள் அப்பேரவை ஒரு சில நபர்களால் ஜனநாயகமற்ற முறையில் கையகப்படுத்தப்பட்டதன் விளைவாக, அது அதன் நோக்கத்திலிருந்து விலகியது. அதனால் கனேடிய தமிழ் காங்கிரஸ் தவிர்ந்த ஏனைய அனைத்து அங்கத்துவ அமைப்புக்களும் உலகத் தமிழர் பேரவையிலிருந்து தாமாகவே விலகிக்கொண்டன.

இன்று வரை உலகத் தமிழர் பேரவை மற்றும் கனேடிய தமிழ் காங்கிரஸ் ஆகிய இரண்டும் ஏற்கனவே இடம்பெற்ற இனப்படுகொலைக்காகவோ அல்லது தமிழர்களின் நியாயமான அடிப்படைக் கோரிக்கைகளுக்காகவோ வாதிட மறுத்துவிட்டதன் மூலம் தாம் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் தமிழ் மக்களை அவர்கள் கைவிட்டிருக்கின்றனர்.

இந்நிலையில் உலகத் தமிழர் பேரவையிலிருந்து வெளியேறிய 14 நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர் தமிழ் அமைப்புக்களில் பெரும்பாலானவை இணைந்து அனைத்துலக ஈழத் தமிழர் அவையை உருவாக்கின.

இதில் 2008 முதலாவது மக்களவை ஆரம்பிக்கப்பட்டு இன்று 14 நாடுகளில் மக்களவைகள் இயங்குகின்றன. இவை தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக தொடர்ந்து வாதிட்டு வருகின்றன.

இதற்கிடையில், தமிழ் மக்களின் பாரம்பரிய மற்றும் வரலாற்று தாயகத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களின் நிலைமை மோசமாகி, அவர்களின் தாயகத்தில் அடிப்படை உரிமைகள் அற்ற திறந்தவெளி சிறைச்சாலையாக மாறியுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையினால் இரத்து செய்யுமாறு பணிக்கப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டம், சுதந்திரப் போராட்டத்தில் உயிரிழந்த தங்கள் பிள்ளைகள் மற்றும் உறவினர்களை நினைவுகூரும் தமிழ் மக்களை துன்புறுத்துவதற்கும் சிறையில் அடைப்பதற்கும் இலங்கை அரசால் பயன்படுத்தப்படுகிறது.

இவ்வாறானதொரு பின்னணியில் உலகத் தமிழர் பேரவை மற்றும் அதன் சதிகாரர்களின் துரோக முயற்சியானது, ஏமாற்றுக்காரர்களுடன் பேரம் பேசும் போலிக்காரணத்தின் கீழ் இலங்கையை சர்வதேச சமூகத்திலிருந்தும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்தும் பாதுகாப்பதையே நோக்காகக் கொண்டிருக்கின்றது.

இந்த ஏமாற்று முயற்சிகளை புறக்கணிக்குமாறு சர்வதேச சமூகத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அரைகுறையான தீர்வு தமிழ் தேசத்தின் பாதுகாப்பை மேலும் சீரழிக்கும். தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு சர்வதேச சமூகம் பரிகார நீதியை வழங்க வேண்டும்.

அத்துடன் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதன் அடிப்படையில் நீண்டகால அரசியல் தீர்வைக் காண உதவ வேண்டும் என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உலகத் தமிழர் பேரவை தமிழர்களின் உரிழைகளிற்கு எதிராக செயற்படுவதுடன் பேரினவாத சிங்கள ஆட்சியாளர்களுடன் கைகோர்த்திருப்பது வெட்ட வெளிச்சமான விடயமே

பகிர்ந்துகொள்ள

Leave a Reply